எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து நடத்திய தாக்குதல்தாரியுடன் எந்தத் தொடர்பும் இல்லை என ஈரான் மறுத்துள்ளது. பதிலாக “தி சாடானிக் வேர்சஸ்” புத்தகத்தின் எழுத்தாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாத்திரமே இந்தத் தாக்குதலுக்கு ஒரே குற்றவாளிகள் என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ருஷ்டி தனது எழுத்தில் மதத்தை இழிவுபடுத்துவதை கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டு நியாயப்படுத்த முடியாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நாசர் கனானி நேற்று திங்கட்கிழமை டெஹ்ரானில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“தாக்குதல்தாரியுடனான எந்தத் தொடர்பையும் நாம் திட்டவட்டமாக மறுக்கிறோம். ஈரான் இஸ்லாமிய குடியரசு மீது குற்றம்சாட்ட எவருக்கு உரிமை இல்லை” என்று கனானி குறிப்பிட்டார்.
“இஸ்லாத்தின் புனித விடயங்களை அவமதிப்பதன் மூலம் ஒன்றரை பில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களின் சிவப்புக் கோடு தாண்டப்பட்டதோடு சல்மான் ருஷ்டி தெய்வீக மதங்களைப் பின்பற்றுபவர்களின் கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும் ஆளாகினார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1988இல் எழுதப்பட்ட “தி சாடானிக் வேர்சஸ்” நாவலுக்காக இந்தியாவில் பிறந்த எழுத்தாளரான ருஷ்டியின் தலைக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டது. 1989இல் அப்போதைய ஈரானின் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லாஹ் ரூஹுல்லா கொமைனி அந்தப் புத்தகத்தை மதநிந்தனைக்கு உரியது என்று அறிவித்ததோடு அந்த எழுத்தாளர் மற்றும் புத்தகத்துடன் தொடர்புபட்ட பதிப்பாளர்களை கொல்ல முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்து மத ஆணை ஒன்றை பிறப்பித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை நியூயோர்க்கில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த ருஷ்டி தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறார்.
24 வயதான ஹாதி மதார் என்பவரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
0 Comments