கொட்டகலை-ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் உள்ள 16 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பிரதான பாலம் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால் இந்தத் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தோட்டத்தில் இருந்து வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.


குறித்த தோட்ட பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.



அத்துடன் இந்த தோட்டத்திலிருந்து கொட்டகலை நகரில் உள்ள பாடசாலைகள், ஸ்டோனிகிளிப் தமிழ் வித்தியாலயம், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்குச் சென்று வருகின்ற சில மாணவர்கள் உள்ளதுடன், வெளியிடங்களுக்கு தொழிலுக்காக சென்று வருகின்ற பலரும் உள்ளனர்.


இவர்களின் பிரதான பாதையாக குறித்த பாலம் வழியான வீதியே காணப்பட்டதோடு, தற்போது இந்த பாலம் வெள்ளப்பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.


இதனால் இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பாலத்தின் ஊடான போக்குவரத்தே இவர்களுக்கு வசதியாக இருந்தது.


மாற்றுப் பாதை ஒன்றின் ஊடாக செல்வதென்றால் காட்டுப்பாதை ஒன்றையே பயன்படுத்த வேண்டும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே, உரிய அதிகாரிகள் இதனை கவனத்திற் கொண்டு உடனடியாக மாற்று வழியை அமைத்துக் கொடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.