மயிலாடுதுறை: திருட்டு பயத்தில் பீரோவுக்கு மின் இணைப்பு கொடுத்த மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவைச் சேர்ந்தவர் அன்பழகி (68). குழந்தைகள் யாரும் இல்லாததால் கணவர் உயிரிழந்த பிறகு தனியாக வசித்து வந்தார். பீரோவில் நகை, பணம் இருந்ததால், திருட்டு பயம் காரணமாக, இரவு நேரத்தில் மட்டும் பீரோவுக்கு மின் இணைப்பு கொடுத்துவிட்டு, மறுநாள் காலையில் மின் இணைப்பை அன்பழகி துண்டித்துவிடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை தூங்கி எழுந்த அன்பழகி, மின் இணைப்பை துண்டிக்காமல், வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு, பீரோவுக்கு அடியில் கோல மாவு டப்பாவை வைத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சீர்காழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் அங்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.