Ticker

6/recent/ticker-posts

பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்டியில் 8 இலங்கை வீரர்களின் பெயர் பரிந்துரை....

 


அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நடப்பு பருவகால (2022-2023) பிக் பாஷ்  லீக்  கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான வீரர்கள் தெரிவில் இலங்கை வீரர்கள் எட்டு பேர் உட்பட 19 நாடுகளைச் சேர்ந்த 279 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

தினேஷ் சந்திமால், துஷான் ஹேமன்த, ப்ரபாத் ஜயசூரிய, ருவன்த கெலபொத்த, ரமேஷ் மெண்டிஸ், பானுக்க ராஜபக்ஷ, லக்ஷான் சந்தகேன், மஹீஷ் தீக்ஷன ஆகியோரே பிக் பாஷ் லீக் அணிகளுக்கு தெரிவாவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்களாவர்.

தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ஷ, ப்ரபாத் ஜயசூரிய, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் உள்ளூர் இருபது 20 லீக் போட்டிகளில் பிரகாசித்து வந்துள்ளதுடன் மஹீஷ் தீக்ஷன இந்த வருடம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக இண்டியன் பிறீமியர் லீக் பந்துவீச்சில் திறமையாக செயற்பட்டிருந்தார்.

மொத்தமாக பரிந்துரைக்கப்பட்டுள்ள 279 வீரர்களில் 100 பேர் புதியவரக்ளாவர். இலங்கையர்கள் அனைவரும் முதல் தடவையாக பிக் பாஷ் லீக்குக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

இதேவேளை தென் ஆபிரிக்க அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ், மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீரர்கள் அண்ட்றே ரசல், ட்வேன் ப்ராவோ, கீரன் பொலார்ட், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ராஷித் கான், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்ற நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட், இங்கிலாந்து வீரர்கள் ஜேசன் ரோய், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டன், பாகிஸ்தான் வீரர் ஷடாப் கான் ஆகிய 12 வீரர்கள் ப்ளட்டினம் குழுவில் இடம்பெறுகின்றனர்.

அவர்கள் எத்தனை போட்டிகளில் விளையாடுகிறார்கள் என்பது கருத்தில் கொள்ளப்படாமல் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 340,000 அவுஸ்திரேலிய டொலர்கள் (இலங்கை ரூபா ஒரு கோடியே 87 இலட்சத்து 33,000) சம்பளம் வழங்கப்படும்.

ஏற்கனவே பிக் பாஷ் லீக்கில் விளையாடிய 26 வீரர்கள் அதே அணிகளால் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஆப்பானிஸ்தான், பங்களாதேஷ், கனடா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, அயர்லாந்து, ஸிம்பாப்வே, நமிபியா, நேபாளம், நெதர்லாந்து, ஓமான், பப்புவா நியூ கினி, ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய 19 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பிக் பாஷ் லீக்குக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments