Ticker

6/recent/ticker-posts

காலிமுகத்திடலுக்கு ஏற்பட்ட நஷ்டம் 49 இலட்சம் ரூபா: செயற்பாட்டாளர்களிடமிருந்து அறவிட சட்ட நடவடிக்கை!

 


காலி முகத்திடலுக்கு அருகில் கோட்டா கோ கம என்றபெயரில் ஸ்தாபிக்கப்பட்ட போராட்டக் களத்தினால் சுமார் 49 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை பெறுவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகார சபை கூறுகிறது.

அந்தக் காணியின் மீள்குடியேற்றம் மற்றும் அடிப்படைப் பணிகளுக்காக 1.5 இலட்சம் ரூபாவும் புல் வெட்டுவதற்கு 47.5 இலட்சம் ரூபாவும் செலவிடப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காலி முகத்திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு செயற்பாட்டாளர்களிடமிருந்து நட்டஈடு பெற்றுக்கொடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை தனது பதவியை இராஜினாமா செய்யுமாறுகோரி சுமார் 3 மாதங்களாக காலி முகத்திடலைச் சுற்றியுள்ள பகுதியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தங்கியிருந்தனர். கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து வெளியேறியதையடுத்து, செயற்பாட்டாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் அறிவித்ததுடன், அதன்படி அவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்த காலி முகத்திடல் பொதுச் சொத்தாகும். 1971 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 3(1) பிரிவின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமான கட்டமைப்புகளை ஏற்படுத்தி இருந்தார்கள். இந்த காலி முகத் திடல் கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமானது. 1978/09/30 ஆம் திகதிய 41 ஆம் இலக்க இவிசேட வர்த்தமானிப்படி இப்பகுதி நகர அபிவிருத்தி பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்திப் பகுதியில் ஏதேனும் அபிவிருத்தி நடவடிக்கை அல்லது தற்காலிக நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டால், 1982 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபை (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 8(A)1 இன் படி அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பல அட்டூழியங்களை செய்துள்ளனர்.

மேலும், அனுமதியின்றி ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அப்பகுதியை சுதந்திரமாக பயன்படுத்துவதற்கான உரிமையும் தடைபட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நகர அபிவிருத்தி அதிகார சட்டத்தை மீறுவதாகும். அதன்படி, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments