Ticker

6/recent/ticker-posts

பொருளாதார நெருக்கடி : மேலும் 4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்..

 நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 4 இலங்கையர்கள் அகதிகளாக  இன்று காலை  இந்தியாவின் ராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாட்டிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி நோக்கி இதுவரை 129 இலங்கையர்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் திருகோணமலை மாவட்டம் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த


ஜெயமாலினி (50) அவரது மகன்கள் பதுர்ஜன் (26), ஹம்சிகன் (22), மகள்  பதுசிக (19) ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர்   மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு இன்று அதிகாலை இந்தியாவின் ராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் சென்ற இலங்கையர்கள் தாங்களாக ஆட்டோவில் ஏறி மண்டபம் கரையோர காவல் நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்த மண்டபம் கரையோர பொலிஸார் நடத்திய விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை மா ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வாழ வழியின்றி உயிரை காப்பாற்றிக்கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும், தாங்கள் நால்வரும்  2006 முதல் 2019 ஆண்டு வரை மண்டபம் முகாமில் பதிவில் தங்கி இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.

இந்திய மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்ன 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

இந்நிலையில், இலங்கையிலிருந்து இந்தியாவின் தமிழகம் சென்ற அகதிகளின் எண்ணிக்கை  133 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments