நமது நாட்டிற்கு தேவையான 40% மருந்துகளை உற்பத்தி செய்யும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது 20% என்ற இலக்கை அடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் பெருமளவிலான பணத்தை மிச்சப்படுத்த முடியும் எனவும், இதன் மூலம் தற்போது நிலவும் டொலர் நெருக்கடிக்கு உயர் தீர்வை வழங்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இரத்மலானையிலுள்ள அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் (SPMC) வளாகத்தில் இடம்பெற்ற மூன்று புதிய மருந்துகளை சந்தைக்கு வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தைரொட்சின் குறைபாட்டிற்கான Levothyroxin 50 mcg, இரைப்பை அமிலத்தன்மையைத் தடுக்கும் Omeprazole 20 mg கெப்சியூல்கள் மற்றும் வலி நிவாரணியான Mefenamic Acid 50 mg மாத்திரைகள் ஆகியன நேற்றையதினம் உத்தியோகபூர்வமாக சந்தைக்கு வெளியிடப்பட்டன. நாட்டின் மருந்து உற்பத்தியில் இது இத்துறையில் உயர் சாதனை என அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் (SPMC) சுட்டிக்காட்டியுள்ளது.
அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள், இந்நாட்டின் மருந்து உற்பத்தியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் இலக்கு வேலைத்திட்டம் குறித்து சுகாதார அமைச்சருக்கு தெரியப்படுத்தியதுடன், குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதன் மூலம் நாட்டிற்கு தேவையான மருந்து உற்பத்தியின் சரியான இலக்குகளை அடைவதற்கு அதிக கவனம் செலுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இலங்கையில் மருந்து உற்பத்திக்கான அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் எதிர்கால இலக்குகளை அடைவதற்காக ஏற்கனவே பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் தேவையற்ற விநியோகச் சங்கிலிகள் பெரும் ஆபத்திற்கு முகம் கொடுத்தால் அது தொடர்பில் சுகாதாரத்துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மருந்து பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு இணையாக எதுவும் இல்லை என்றும், எனவே நாட்டு மக்களின் சுகாதார சேவையில் அரசின் கவனம் எந்த வகையிலும் குறைவடையாது என்றும் அமைச்சர் கூறினார்.
நாட்டுக்குத் தேவையான அனைத்து மருந்துப் பொருட்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடிந்தால் அது பெரும் சாதனையாக அமையும் எனவும் இதில் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பு மிக முக்கியமானது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரச வைத்தியசாலைகளில் மருத்துவ மற்றும் வெளிநோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் தற்போது உள்நாட்டிலேயே பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், அது மேலும் அதிகரிக்கப்பட்டு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவன்ச இங்கு பேசுகையில்,
தற்போது அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் நாட்டிற்குத் தேவையான சுமார் 3,040 மில்லியன் மாத்திரைகள் மற்றும் கெப்சியூல்களை உற்பத்தி செய்து வருவதாகவும் அதனை குறிப்பாக அரச வைத்தியசாலைகள் ஊடாக நோயாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் மேலும் 50 மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதே நோக்கமெனவும், தற்போது பெரும்பாலான பணிகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்காலத்தில் அதிகளவான மருந்துகள் பாவனையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய வைத்தியர் உத்பல இந்திரவன்ச, அந்த மருந்துகளை அரச மற்றும் தனியார் துறைக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் (SPMC) தொடர்ச்சியான உற்பத்திக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நீரிழிவு, வலிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சளி போன்ற நோய்களுக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு அரச மருந்து கூட்டுத்தாபனம் முன்னுரிமை அளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
0 Comments