21 மடிக்கணினிகளை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள்

இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கணனிகளை அவர் பல சந்தர்ப்பங்களில் திருடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர் பணத்திற்காக மடிக்கணினிகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

திருடப்பட்ட 13 மடிக்கணினிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றையவை விற்கப்பட்டு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மற்றைய சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.