முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை பதவியிலிருந்து வெளியேற்ற ஆரம்பிக்கப்பட்ட, அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை மையப்படுத்தி நாட்டின் பல பகுதிகளில் 120 க்கும் அதிகமான போராட்டக்காரர்கள்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகமாக இருக்கும் என தெரிவித்த போராட்டக் கள செயற்பாட்டாளர் ஒருவர், தற்போதும் அது தொடர்பிலான தகவல்களை சேகரித்து வருவதாகவும் கூறினார்.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கீழ் இயங்கும் கொழும்பு மத்தி, வடக்கு, தெற்கு பொலிஸ் நிலையங்கள் பலவற்றின் ஊடாகவும் வலய குற்ற விசாரணை பணியகங்கள், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவு, மிரிஹானை விசேட குற்ற விசாரணை பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட விசாரணை அதிகாரம் கொண்ட பிரிவுகளால் இந்த போராட்டக்காரர்களில் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு எதிராக, பல நீதிமன்றங்களில் சுமார் 25க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, போராட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவரான சட்டத்தரணி நுவன் போப்பகே தெரிவித்தார். கோட்டை, கொழும்பு பிரதான நீதிமன்றம், கடுவலை உள்ளிட்ட நீதிமன்றங்களில் அவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
0 Comments