பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.
உள்ளூர் நேரப்படி சுமார் 03:00 மணிக்கு அவரது விமானம் தலைநகர் மாலேவில் தரையிறங்கியதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை மக்கள் முற்றுகையிட்ட பிறகு அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது..
அவரது சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்திருக்கிறது.
மக்களின் எதிர்ப்புக்கு இடையே இன்று பதவி விலகுவதாக கோட்டாப ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு மற்றும் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் போன்ற அடிப்படை தேவைகளுக்கு ஏற்பட்டிருக்கும் தடுப்பாடு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிபராக இருக்கும்வரை கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முடியாது. அதனால் பதவியில் இருக்கும்போதே அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட விரும்பியதாக நம்பப்படுகிறது.
அதிபர் நாட்டைவிட்டு வெளியேறி இருப்பதால் நாட்டில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. கோட்டாபயவுக்கு அடுத்து யார் அதிபராக பதவியேற்பார் என்பது குறித்து தெளிவான சூழல் இல்லை.
எதிர்க்கட்சிகள் அடங்கிய அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதில் ஒருமித்த கருத்து இன்னும் எட்டப்படவில்லை.
அதிபர் பதவி விலகினால் அரசியல் சட்டப்பட்டி, அதிபராக பிரதமர் செயல்பட வேண்டும்.
இருப்பினும் தற்போது பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தற்போது பரவலான மக்கள் எதிர்ப்பு காரணப்படுகிறது. கடந்த சனிக்கிழமையன்று அவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சி அமைவதற்கு தாம் வழிவிட்டு பதவி விலகப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.
இதனால் நாடாளுமன்றத்தின் சபாநாயகரே தற்காலிக அதிபராக பதவியேற்பதற்கான வாய்ப்பு அதிகம் என அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் மஹிந்த யாப்பா அபேவர்தன ராஜபக்ஷக்களின் கட்சியைச் சேர்ந்தவர்.
புதிய அதிபராக யார் பதவியேற்றாலும் நாடாளுமன்றத்தில் 30 நாள்களுக்குள் அதற்கான ஒப்புதலைப் பெற வேண்டும். அதிபர் பதவியின் எஞ்சிய காலம் வரை அவர் நீடித்திருக்கலாம்
0 Comments