Ticker

6/recent/ticker-posts

வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கருத்துக்கள் குறித்து ஜனாதிபதி கவலை..


 வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உத்தியோகப்பற்றற்ற விதத்தில் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு இராஜதந்திரிகளை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்துள்ள ஜனாதிபதி தனது கரிசனைகளை உத்தியோகப்பற்றற்ற விதத்தில் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட இராணுவநடவடிக்கை குறித்து தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி இராஜதந்திரிகள் அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

உங்கள் நாடுகளில் ஜனாதிபதி அலுவலகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கு அனுமதிப்பீர்களா என ஜனாதிபதி கேட்டுள்ளார்.

எதிர்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியாவதை அடிப்படையாக வைத்து அறிக்கைகளை வெளியிடுவதற்கு பதில் அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெறவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளிற்கு தெளிவுபடுத்தியுள்ள ஜனாதிபதி நீதிமன்ற உத்தரவை தொடர்ந்தும் அவர்கள் ஜனாதிபதி மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

நேற்று காலை ஆறுமணியுடன் அங்கிருந்து வெளியேறுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களை கேட்டுகொண்டபோதிலும் அவர்கள் அதனை ஏற்கமறுத்து வேறு நேரத்தை முன்வைத்தனர் அதனை அதிகாரிகளால் ஏற்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உதவிகள் இலங்கைக்கு நட்பு நாடுகளிடமிருந்து பெரிதும் தேவைப்படும் சூழ்நிலையில்  சமூக ஊடகங்களை அடிப்படையாகவைத்து அறிக்கைகளை வெளியிடுவது இலங்கையின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments