ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உரிய அதிகாரிகளிடம் கையளிக்குமாறு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கட்டடங்களில் இடம்பெற்ற நாசகாரச் செயல்கள் குறித்து மிகவும் கவலையடைவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை போராட்டக் குழுக்களின் உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் அந்த வளாகத்துக்கு வருகை தருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் பிற பொதுச் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அவற்றை ஆக்கிரமித்துள்ளவர்களைக் கேட்டுக் கொள்வதுடன், இந்தக் கட்டடங்களின் புனிதத்தன்மைக்கு மதிப்பளிக்குமாறு சங்கம் அவர்களை வலியுறுத்தியுள்ளது.
சுமூகமான மற்றும் அமைதியான அதிகார மாற்றத்துக்கான தனது அழைப்பை சட்டத்தரணிகள் மீண்டும் வலியுறுத்துவதுடன், கட்சித் தலைவர்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய குறுகிய காலக்கெடுவை வரவேற்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையை ஆளும் கட்டமைப்பான அரசியலமைப்பின் விதிகளை புறக்கணிப்பது நமது நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் சிறந்ததல்ல என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
போராட்டம் நடத்தும் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை கவனத்தில் கொள்வது முக்கியம் என்றும் ஓர் ஒழுங்கான மாற்றத்தை உறுதிப்படுத்துவதும், சட்டத்தின் ஆட்சிக்கு தொடர்ந்து மரியாதை செய்வதும் சமமாக முக்கியமானது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments