பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


பாராளுமன்ற உறுப்பினரகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பல்வேறு வகையான விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுவது தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான பதிவுகளை பதிவிடும் நபர்கள் மற்றும் அவற்றை உருவாக்கி பகிர்கின்ற, அவற்றில் மாற்றங்கள் செய்கின்ற நபர்கள் தொடர்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் தலைமையகம் விசேட கவனத்தை செலுத்தி உள்ளது.


அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பிரதிப் பொலிஸ் மாஅதிபர் (DIG) ஒருவரின் கீழ் செயற்படுகின்ற கணனி குற்ற விசாரணை பிரிவிற்கு, பொலிஸ் தலைமையகத்தினால் தற்போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.