அரசியலமைப்பின் 38(1) (ஆ) சரத்தின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்ததன்படி, இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமானது. இதனைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 40(1) (இ) சரத்தின் படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் படி, கோட்டாபய விட்டுச்சென்றுள்ள மிகுதிப் பதவிக்காலத்திற்காக அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை, பதில் ஜனாதிபதியாகியுள்ளார்.


ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில், எஞ்சியுள்ள பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியொருவரை தேர்ந்தெடுப்பது தொடர்பில், அரசியலமைப்பின் 40வது சரத்தும், 1980ம் ஆண்டின் 2ம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமும் உரிய ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. 


ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ள இந்த நிலையில், இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வது பாராளுமன்றமே (அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்வார்கள்). 


அரசியலமைப்பின் பிரிவு 40(1)(அ) மற்றும் 1980ம் ஆண்டின் 2ம் இலக்க சட்டத்தின் பிரிவு 3(1) ஆகியன பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களில், ஜனாதிபதியாவதற்கு அரசியலமைப்பு கூறும் தகுதிகளைக் கொண்ட, ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வழங்குகிறது. அந்தத் தேர்தலானது, ஜனாதிபதி பதவி வெற்றிடமான திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் புதிய ஜனாதிபதி, பதவி விலகிய ஜனாதிபதியின் பதவிக் காலத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான, அதாவது 2024 நவம்பர் வரை பதவியிலிருப்பார்.


பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியை எவ்வாறு தேர்ந்தெடுக்கும்?


பாராளுமன்றம் கூடுதல்


ஜனாதிபதி பதவி விலகியவுடன், ஜனாதிபதி பதவி வெற்றிடமாகி மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அத்தகைய கூட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட திகதி மற்றும் நேரத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும் என 1980ம் ஆண்டின் 2ம் இலக்க சட்டத்தின் பிரிவு 4 வழங்குகிறது. அவ்வாறு பாராளுமன்றம் கூடும் போது, பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளதை பாராளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதுடன். அடுத்த ஜனாதிபதியை பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுக்களுக்கான திகதியாக, அன்றிலிருந்து 48 மணிநேரத்திற்கு குறையாத, ஏழு நாட்களுக்கு அதிகரிக்காத திகதியையும், நேரத்தையும் நிர்ணயம் செய்வார் இது பிரிவு 5 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


வேட்புமனு


குறித்த வேட்புமனுத் தினத்தில், பாராளுமன்றம் கூடும் போது, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் அதிகாரியாகச் செயற்படுவார். ஜனாதிபதி பதவிக்கு குறித்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் தேர்ந்தெடுக்க விரும்பும் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர், அவர் முன்மொழிய விரும்பும் உறுப்பினரின் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற வேண்டும். 


அதன்பின்னர், அந்த உறுப்பினர், தான் முன்மொழிய விரும்பும் உறுப்பினரின் பெயரை ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் முன்மொழிவார். இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் அதனை வழிமொழிய வேண்டும். இதில் விவாதத்திற்கு இடமில்லை. 


இவ்வாறு, ஜனாதிபதி பதவிக்காக ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் மட்டும் முன்மொழிந்து, வழிமொழியப்படும் போது, அவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பார். அவ்வாறன்றி, ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் முன்மொழிந்து வழிமொழியப்படும்போது, பாராளுமன்ற செயலாளர் நாயகம், அன்றிலிருந்து 48 மணி நேரத்திற்கு மிகாத காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். அதற்கான திகதியையும், நேரத்தையும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பார். இது பிரிவு 6 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


தேர்தல்


தேர்தல் திகதியன்று, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் அதிகாரியாகச் செயற்படுவார். தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படும். இந்தத் தேர்தலில் விசேடத் தன்மை யாதெனில், சபாநாயரும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வாக்களிப்பில் கலந்துகொள்வார். பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் அழைக்கப்படும் போது, அவர் தேர்தல் அதிகாரியிடம் சென்று வாக்குச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, இரகசிய முறையில் வாக்களிப்பார். தேர்தல் அதிகாரி, வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முன், முதலில் வாக்களிக்காத எந்த உறுப்பினரின் பெயரையும் இரண்டாவது முறையாக அழைப்பார். அத்தகைய உறுப்பினர் தனது பெயர் இரண்டாவது முறை அழைக்கப்பட்ட பிறகும் கூட வாக்களிக்கவில்லை என்றால், அவர் வாக்களிப்பதில் இருந்து விலகியதாகக் கருதப்படுவார். இது பிரிவு 7இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாக்களிக்கும் முறை


மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறையை ஒத்த முறையிலேயே, பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள். அதாவது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் ஜனாதிபதிப் பதவிக்காக முன்மொழியப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் 1, 2 என்றவாறு முன்னுரிமைத் தெரிவு அடிப்படையில் வாக்களிக்க முடியும். தனது முதலாவது, அல்லது ஒரே தெரிவிற்கு முன்னால் “1” என்று இலக்கமிட்டு வாக்களிக்க வேண்டும். இரண்டிற்கு மேற்பட்டவர்கள் போட்டியிடும் போது, அடுத்த தெரிவுகளை 2, 3… என்று குறிப்பிட்டுத் தெரிவிக்க முடியும். இது பிரிவு 8 ஆகும்.


வாக்கெண்ணிக்கை


தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை ஆய்வு செய்து, செல்லாத வாக்குச் சீட்டுகளை நிராகரித்த பிறகு, மீதமுள்ள வாக்குச் சீட்டுகளை ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவு செய்யப்பட்ட முதல் (“1”) விருப்பத்தேர்வுகளின்படி பிரிக்க வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் பெற்றுக்கொண்ட முதல் விருப்பத் தேர்வு வாக்குகளின் எண்ணிக்கையை அவர் கணக்கிடுவார். இது பிரிவு 10 ஆகும்.


எந்தவொரு வேட்பாளரும் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கு மேல் பெற்றிருந்தால், தேர்தல் அதிகாரி, அத்தகைய வேட்பாளரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். இது பிரிவு 11 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


எந்தவொரு வேட்பாளரும் பதிவான செல்லுபடியாகும் முதல் விருப்பத் தேர்வு வாக்குகளில் பாதிக்கு மேல் பெறாதிருந்தால், ஆகக் குறைந்த முதல் விருப்பத் தேர்வு வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர், போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, அவருடைய வாக்குச் சீட்டுக்களில் இரண்டாவது (“2”) விருப்பத் தேர்வு வாக்குகள் எண்ணப்பட்டு, அவற்றில் மற்றைய வேட்பாளர்கள் பெற்றுள்ள இரண்டாவது விருப்பத் தேர்வு வாக்குகள், அவர்கள் பெற்றுக்கொண்ட முதல் விருப்பத் தேர்வு வாக்குளுடன் சேர்ந்து கணக்கிடப்படும். 


இப்படியாக ஒரு வேட்பாளர் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கு மேல் பெறாத நிலையில், குறைந்த வாக்குளைப் பெற்றவர்கள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டு, அவர்களுடைய இரண்டாம் விருப்புவாக்கு அல்லது, இரண்டாம் விருப்பு வாக்கு பெற்றவரும் போட்டியிலிருந்து ஏலவே நீக்கப்பட்டிருந்தால், மூன்றாவது விருப்பு வாக்கு என்றவாறு அவை கணக்கெடுக்கப்பட்டு குறித்த வேட்பாளர்களின் வாக்குகளோடு ஒன்று சேர்க்கப்படும். இவ்வாறு எண்ணிய பின்னரும், எண்ணிக்கையின் முடிவில் எந்த வேட்பாளரும் செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கு மேல் பெறவில்லை என்றால், அந்த எண்ணிக்கையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை தேர்தல் அதிகாரி ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும். இது பிரிவு 12 ஆகும்.


இரண்டு வேட்பாளர்கள் சம அளவிலான வாக்குகளைப் பெற்றிருந்தால், தேர்தல் அதிகாரி தான் தீர்மானிக்கும் வகையிலான லொத்தர் ஒன்றின் மூலம், அந்த இருவரில் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுப்பார். இது பிரிவு 13 ஆகும்.


ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் பெயரை, அத்தகைய தேர்தல் திகதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் வர்த்தமானியில் வெளியிட வேண்டும். இது பிரிவு 17 ஆகும்.


கள நிலவரம்


தற்போதைய களநிலவரத்தின்படி, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுர குமார திசாநாயக்க, டளஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதிப் பதவிக்கு முன்மொழியப்படலாம் என்று தெரிகிறது. இன்றைய நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டினை இன்னும் அறிவிக்கவில்லை.


ஆகவே எத்தனை பேர் வாக்களிக்கப்போகிறார்கள். எத்தனை பேர் வாக்களிப்பை புறக்கணிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. எத்தனை பேர் மொத்தம் செல்லுபடியான முறையில் வாக்களிக்கிறார்கள் என்பதில்தான், ஒருவர் முதல் சுற்று வாக்கெடுப்பிலேயே ஜனாதிபதியாவதற்கு எத்தனை வாக்குகள் தேவை என்பதைச் சொல்ல முடியும். 


225 பேரும் செல்லுபடியான முறையில் வாக்களித்தால், ஜனாதிபதியாவதற்கு, ஒருவருக்கு 113 முதல் விருப்புரிமை வாக்குகள் தேவை. வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறையக் குறைய, வெற்றிக்கான எண்ணும் குறையும். 200 பேர் மட்டுமே செல்லுபடியான முறையில் வாக்களித்தால், வெற்றிக்கான எண் 101 ஆகும்.


களம் தயார். அடுத்த ஜனாதிபதி யார் என்பது இந்த வாரம் நிச்சயமாகும்.


நன்றி - தமிழ் மிரர்