நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக பல மாநிலங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரிய பாஜக-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அதன் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
அந்த விசாரணையின்போது, தான் தெரிவித்த கருத்துக்கு மொத்த இந்தியாவிடமும் நூபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜெ.பி. பார்டிவாலா அடங்கிய அமர்வு இதுதொடர்பான விசாரணையின்போது தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
நூபுர் ஷர்மா நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இன்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி சூர்ய காந்த், "நூபுர் ஷர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ளாரா?" என்று குறிப்பிட்டார்.
மேலும் அவரைக் கண்டித்த உச்சநீதிமன்றம், அவர் சிந்திக்காமல் பேசிய பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் பற்றி எரிய வைத்துள்ளது என்று கூறியது.
உதய்பூர் தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு அவருடைய இந்தச் செயல் தான் பொறுப்பு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"அரசியல் திட்ட நோக்கத்தை விளம்பரப்படுத்துவதைத் தவிர, ஏற்கெனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்க வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?" என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
"நூபுர் ஷர்மாவின் கருத்துகள் 'வருத்தத்தை' உண்டாக்கும் வகையில் உள்ளது. இந்தக் கருத்துகளை அவர் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன?" என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
நூபுர் ஷர்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், நூபுர் ஷர்மா தன்னுடைய கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் கருத்துகளை உடனடியாகத் திரும்பப் பெற்றதாகவும் கூறினார்.
ஆனால், மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங் கூறியதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "நூபுர் ஷர்மா தொலைக்காட்சியில் தோன்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்," என்று கூறியதுடன் "அவர் கருத்துகளை திரும்பப் பெற்றபோது அது மிகவும் தாமதமாகிவிட்டது. உணர்வுகள் புண்படுத்தப்பட்டால்... என்பது போன்று மேம்போக்காக தெரிவித்தே அவர் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்றார்," என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
"நாட்டிலுள்ள நீதிபதிகள் அவரை விட மிகவும் சிறியவர்கள் என்ற அவருடைய ஆணவத்தை இந்த மனு காட்டுகிறது," என்று நூபுர் ஷர்மா பல்வேறு மாநிலங்களில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை மொத்தமாக டெல்லிக்கு மாற்றுமாறு கோரிய மனுவை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நூபுர் ஷர்மா கருத்துத் தெரிவித்த விதம் குறித்துக் கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம், "நீங்கள் ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பது, இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதற்கான உரிமையை உங்களுக்கு வழங்கவில்லை," என்றும் கூறியுள்ளது.
"இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை ஒரே இடத்தில் நடத்தியிருக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. நான் எந்த வகையான விசாரணையில் இருந்தும் தப்பி ஓடவில்லை எனச் சொல்கிறேன். எனவே விசாரணையை ஒரே இடத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று இந்த நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்," என்று உச்ச நீதிமன்றத்தில் மனீந்தர் சிங் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "இந்த பெண் நாடு முழுவதும் உணர்வுகளை தூண்டிய விதம், நாட்டில் நடப்பதற்கு அவர் ஒருவரே பொறுப்பு என்று காட்டுகிறது," என குறிப்பிட்டனர்.
"நூபுர் ஷர்மா எங்கும் செல்லமாட்டார். எந்த விசாரணைக்கும் தேவைப்படும்போது ஆஜராவார்," என்று மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங் உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
மேலும், பல மாநிலங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைத்து டெல்லியில் விசாரிக்க வேண்டுமென்ற நூபுர் ஷர்மாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
நூபுர் ஷர்மா மீது பதிவு செய்யப்பட்ட புகாருக்குப் பிறகு டெல்லி காவல்துறை என்ன செய்தது என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், "அவருடைய புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால், பல முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருந்தும் அவர் டெல்லி காவல்துறையால் இன்னமும் தொடப்படவில்லை. உங்களைத் தொட யாருக்கும் தைரியம் இல்லை," என்றும் குறிப்பிட்டனர்
0 Comments