ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ராஜினாமா கடிதத்தில் ஜூலை 13 ஆம் திகதியிட்டு நேற்று கையொப்பமிட்டதாகவும், அதனை நாடாளுமன்ற சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் என்றும் ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.


ஜனாதிபதியின் ராஜினாமா கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதனை அவர் அதனை சபாநாயகரிடம் கையளிப்பார்.

இந்த கடிதம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பதோடு, கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடையும் அறிவிப்பையும் நாளை வெளியிடுவார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மதியம் நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்ற ஊகங்கள் நேற்று நிரம்பியிருந்தன. ஆனால் இந்த அறிக்கையை ஜனாதிபதிக்கு நெருக்கமான மூத்த வட்டாரங்கள் நிராகரித்து, ராஜபக்ஷ இன்னும் நாட்டில் இருப்பதாகவும், ஆயுதப்படையினரால் அவர் பாதுகாக்கப்படுகிறார் என்றும் ‘டெய்லி மிரரு’க்கு உறுதிப்படுத்தியது.


ஜூலை 09 கலவரத்திற்கு சற்று முன்பு, ஜனாதிபதி ராஜபக்ஷ கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து பாதுகாப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டதோடு, பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் கடல் எல்லைக்குள் கடற்படைக் கப்பலில் வைத்து பாதுகாக்கப்பட்டார்.

இருந்தபோதிலும் நேற்று காலை 9.30 மணியளவில் முப்படைத் தளபதிகளை ஜனாதிபதியை சந்தித்ததாகவும், அதன்பின்னர் அவர் நாட்டில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் நாட்டில் எங்கு இருக்கிறார் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் இந்த வாரம் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது. இது புதிய ஜனாதிபதி பதவியேற்கவும், அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கவும் வழி வகுக்கும்.

எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 19ஆம் திகதி நடைபெறும்.