Ticker

6/recent/ticker-posts

மீண்டும் அவசரகால சட்டம், எரிபொருள் நெருக்கடி, புதிய ஜனாதிபதிக்கு சர்வதேசம் உதவுமா?


 ஹிதாயத் சத்தார் 

பாராளுமன்றத்தில் இரு வாரங்களுக்கு முன் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டபோது போடப்பட்ட அவசரகாலச்சட்டம் 14 நாட்களின் பின்னர் அதனை மேலும் நீடிப்பதற்காக பாராளுமன்றம் கூட்டப்பட்டு 120/63 வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டதுடன், மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட முக்கிய நபர்களை கைது செய்தும் புதிய அரசாங்கம் தனது அடக்குமுறைகளை ஆரம்பித்துள்ளது. 

மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தீர்க்கப்படுவது போன்ற நாடகங்கள் அரங்கேற்றப்பட்டாலும் இதன்பின்னர் எரிபொருள் கப்பல்கள் வருவதற்கான எந்த தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.  நாட்டிற்கு வந்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கு கூட அரசாங்கத்தினால் டொலர் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் எதிர்வரும் வாரங்களில் மீண்டும் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்படும் எனவும் போராட்டக்காரர்களுக்கு நடத்திய தாக்குதலை அடுத்து நெருக்கடி நிலையை தீர்க்க சர்வதேசம் புதிய ஜனாதிபதிக்கு உதவுமா? என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹிதாயத் சத்தார் கேள்வி எழுப்பினார்.

அத்தோடு எரிபொருள் விநியோகிப்பதற்கான QR கோர்ட் முறைமையை பிற்போட அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் இதன்காரணமாக எரிபொருள் வரிசை மேலும் நீடிக்கும் எனவும் இதன்மூலம் மொட்டு அரசாங்கத்தின் இயலாமை தொடர்ந்தும் வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் எரிபொருள்,சமையல் எரிவாயு நெருக்கடி தீர்க்கப்படுவது போன்ற நாடகங்கள் அரங்கேற்றப்பட்டாலும் இனிமேல் எரிபொருள் கப்பலொன்று வருவதற்கான எந்த தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை. வந்துள்ள கப்பல்களுக்கும் டொலர் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கான எரிபொருள் இறக்குமதிக்கே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநரும் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் காலிமுகத்திடல் அமைதி வழி போராட்டத்தின் மீது நடத்திய தாக்குதலினால் சர்வதேச நாடுகள் புதிய ஜனாதிபதியின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் ஜீ.எஸ்.பி சலுகையும் கேள்விக்குரியாகியுள்ளது. எனவே நாட்டில் எரிபொருள் நெருக்கடி மீண்டும் உருவெடுக்கவுள்ள நிலையில்,குறித்த நெருக்கடியை தீர்க்க சர்வதேச உதவிகள் அத்தியாவசியமாகும். இவ்வாறான நிலையில் புதிய ஜனாதிபதிக்கு சர்வதேசம் உதவுமா?

அத்தோடு QR கோர்ட் முறைமையின் பிரகாரம் எரிபொருள் வழங்கும் திட்டமும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை பிற்போட அரசாங்கம்  உத்தேசித்துள்ளது. இது மொட்டு அரசாங்கத்தின் இயலாமையை தொடர்ந்தும் நிரூபித்துகாட்டுவதாக உள்ளது. எரிபொருள் வரிசைகளினால் கடந்த இரு நாட்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத்தின் இயலாமையினால் வரிசைகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கூடினாலும் குறையாது. இது கவலைக்குரிய விடயமாகும். 

அத்தோடு எரிபொருள் நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம்  மேலும் ஒருமாதம் நீடித்துவிட்டு ,மறுபுறம் பாடசாலைகளை ஆரம்பித்துள்ளது. இந்த தீர்மானத்தின் பரஸ்பர நிலையை புரிந்துக்கொள்ள முடிகிறது.  பாடசாலைகளுக்கு இன்று மாணவர்கள் ,ஆசிரியர்கள் வருகை தர பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பாடசாலை நடவடிக்கைகளை தொடர்வதாயின் கல்வியை அத்தியாவசிய சேவையாக பிரகடணப்படுத்த வேண்டும். அதன்மூலம் ஆசிரியர்களுக்கும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே மொட்டு அரசாங்கத்தினதும்,  ராஜபக்சவினரினதும் பாதுகாப்பாளராக உள்ள புதிய ஜனாதிபதியினாலும் ஒரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை. பொதுநலமின்றி சுயநலமாக செயற்படும் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதினால் நாடு மேலும் அதால பாதாளத்திற்கு செல்லும். அதனை தவிர்க்க வேண்டுமென்றால் சர்வ கட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி புதிய ஜனாதிபதி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒன்றுகூட்டி பேச்சலவில் மட்டுமல்லாமல் செயல்முறையில் ஒரு அரசாங்கத்தை அமைத்து IMF மற்றும் ஏனைய உலக நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments