எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை.

பொலிஸ் அதிகாரி காயம், 13 பேர் கைது...!

வெல்லவாய பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 13 சந்தேகநபர்களையும் இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லவாய நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விநியோகிப்பதற்கான எரிபொருள் கையிருப்பு முடிந்துவிட்டதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து பொதுமக்கள் எரிபொருள் நிலையத்தின் மீது கற்கள் மற்றும் போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 20 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.