கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய தண்ணீருக்காக நீர் வழங்கல் அதிகார சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை பொலிஸ் திணைக்களம் இன்னும் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த போராட்டத்தின் போது பொலிஸாரால் பாரியளவிலான தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நீர் குழாய்களை இயக்குவதற்கான தண்ணீரைப் பயன்படுத்தியதற்காக – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு பொலிஸ் திணைக்களம் இன்னும் பணம் செலுத்தவில்லை என பொலிஸ் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பொலிஸ் நிலையங்களில் இருந்து கொழும்புக்கு கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது பெருமளவிலான கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால், கொழும்பு பொலிஸ் நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையிலான கண்ணீர் புகை குண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

“எனவே, மற்ற பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களிலுள்ள கண்ணீர் புகைக் குண்டுகளை கொழும்புக்கு அனுப்புமாறு நாங்கள் கேட்க வேண்டியிருந்தது” என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.