போலியான கலந்துரையாடல்கள் வேண்டாம். ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும்*!

கோட்டாபய ராஜபக்ஸவும், மக்கள் ஆணை இல்லாத தற்போதைய பிரதமரும் என இருவருமே பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்ற படியால், தற்போது சட்டவிரோதமாக பிரதமராக பதவி வகித்து வரும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள கலந்துரையாடல்களில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் பதுங்கியிருந்த ராஜபக்ஸக்கள் மீண்டும் அரசியல் களத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பளிக்கப்பட்டதும், இப்போராட்டத்திற்கு துரோகம் இழைத்தவரும் தற்போதைய பிரதமர் ஆவார் என்பதுடன் இந்த நெருக்கடியில் அவரும் பிரதிவாதி என்பதை குறிப்பிட வேண்டும்.

தன்னிச்சையான,அடக்குமுறையான,

ஜனநாயக விரோத அரசாங்கத்தின் முடிவு இப்போது கண்ணுக்குத் தென்பட்ட வன்னமுள்ள வேளையில் குதிரை ஓடிய பிறகு தொழுவத்தை மூடுவது போன்ற வெற்று கலந்துரையாடல்களில் நாங்கள் பங்கேற்கப்போவதில்லை.

எமது அபிமானம் மிக்க தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே இலக்கில் இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றுபட்டிருக்கும் தருணத்தில் அந்த வெற்றியின் இலக்கு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் நிலையில் போலியான பிரதமரால் அழைக்கப்படும் மற்றொரு வீண் கலந்துரையாடலால் இன்னுமொரு சுற்று ராஜபக்ஸக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான் நடக்கும். இத்தகைய நிலையற்ற தீர்வுகளிலிருந்து விடுபட்டு முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்.

கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாவலர்களுடனும், வாயில்காப்பாளர்களுடனும் நாட்டின் எதிர்காலம் குறித்து கலந்துரையாட நாங்கள் விரும்பவில்லை என்பதோடு, மக்கள் போராட்டத்துடன் முன்நின்ற அனைத்து தரப்புகளுடன் இணைந்து இந்நாட்டைக் கட்டியெழுப்ப பங்களிப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


சஜித் பிரேமதாஸ 

எதிர்க்கட்சித் தலைவர்.