கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக நம்பப்படும் அறையொன்றிலிருந்து நேற்று (09) ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட, ஒரு கோடியே 78 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கணக்கிட்டு, அங்கு கடமையிலிருந்த விசேட அதிரடிப்படை பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர் அப்பணத்தை கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் பணத்தை ஒப்படைக்குமாறு குறித்த பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
பின்னர் அங்கு வந்த கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணத்தை பெற்றுக் கொண்டு பணத்தைக் கண்டுபிடித்து எண்ணுவதற்கு உதவிய ஐந்து பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் பணத்தை கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதன் பின்னர் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணத்தை சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.
எவ்வாறாயினும், கோட்டை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சாகர லியான், பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் இது தொடர்பில் அறிவித்தபோது, பணத்தை யாரிடமும் ஒப்படைக்காமல் பொலிஸாரின் காவலில் வைத்திருக்குமாறு பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இது தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், இந்த நிலைமையை தெளிவுபடுத்தி வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேட்டுக் கொள்கிறது.
முன்னதாக, கோட்டா கோ கிராமம் உள்ளிட்ட பிரதேசங்கள் தாக்கப்பட்டு, நாடு முழுவதும் பரவிய அமைதியின்மை அலைகளின் போது சில சந்தர்ப்பங்களில் பல திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அந்த சம்பவங்களுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்க புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரங்களை பதிவிட்ட பொலிஸ், பல கோடி ரூபா பணத்தை பொலிஸ்யிடம் ஒப்படைப்பது குறித்து ஏன் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
0 Comments