ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள் மூவர் தொடர்பான அடையாள அணிவகுப்பினை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதவான் நடவடிக்கை எடுத்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் மன்றில் ஆஜராகியிருந்ததுடன், இந்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் நபரான இயன் பெரேரா வௌிநாட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததென அறிவித்தனர்.

சந்தேகநபர் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

வெளியான CCTV காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.