பொலன்னறுவை – வெலிகந்த, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 400 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
அவர்களில் 232 பேர் மீண்டும் சரணடைந்துள்ளனர். 200-க்கும் அதிகமானவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தப்பிச்சென்ற கைதிகளுக்கும் அவர்களை தேடிச்சென்ற பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே, பொலன்னறுவை சோமாவதிய வீதியிலுள்ள சுங்காவில் பாலத்திற்கு அருகே மோதல் ஏற்பட்டது. இதன்போது, கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்படுகின்ற 997 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் சுமார் 400 பேர் தப்பிச்சென்றதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட கைதி ஒருவரிடமிருந்து நேற்று புகையிலை மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த கைதிக்கும் ஆலோசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வலுவடைந்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 36 வயதான குறித்த கைதி இன்று காலை உயிரிழந்திருந்ததாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் கூறினார்.
0 Comments