Ticker

6/recent/ticker-posts

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

 


நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை காரணமாக நேர்ந்த உயிரிழப்பு சம்பவங்களும் காயங்களும் போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டமைக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சி மற்றும் திறமையின்மையினாலேயே ஆகும். 

சிறைச்சாலைக்குள் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி அன்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சமயம் பிரஸ்தாபித்திருந்தார்.

ஆகவே, இந்த சந்தர்ப்பத்திலும் பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதால் தற்போதைய அரசாங்கமும் இந்த சம்பவத்திற்கு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் ‘முறைமை மாற்றம்’ (System Change) தோல்வி.

முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று நீர்கொழும்பு சிறைச்சாலையை மையமாகக் கொண்டு இடம்பெற்ற சம்பவத்தின் மூலம் தற்போதைய முறைமை தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

நாட்டினுள் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அரசாங்கத்திற்கு முடியாதா என கேள்வி எழுப்புகிறேன். சிறைச்சாலைகளுக்குள் குறிப்பிட்ட மனிதாபிமான ரீதியிலான நிர்வாகமொன்றை முன்னெடுக்க முடியாது ஏன் என கேள்வி எழுப்புகிறேன். 

நாட்டு மக்கள் இதனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அரசாங்கம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த மோதல் தொடர்பாக சுயாதீன, பக்கசார்பற்ற விசாரணை அவசியம்.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சுயாதீனமான, பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணையொன்று அவசியமாகும். அரசாங்கத்திற்கு விரும்பியவாறு அறிக்கைகளைத் தயாரிக்கும் குழுவாக அமையாது, இது தொடர்பாக வெளிப்படையான விசாரணையொன்று அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இனியாவது தன்னிச்சையாக நடந்து கொள்ளாதீர்கள்.

தேசிய பாதுகாப்பு என்பது ஒரு பரந்த பார்வையைக் கொண்ட ஒரு விடயமாகும். கல்வி, பொருளாதாரம், சிறைச்சாலை, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய அனைத்தும் இதற்குள் அடங்கும்.

அன்று அகந்தை மனப்பான்மையுடன் மேசைகளை எடுத்துக்கொண்டு வாருங்கள் தேசிய பாதுகாப்பு குறித்து மேலதிக வகுப்புகளை (Tuition Classes) நடாத்துகிறோம் என கூறிய இந்த அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த அகந்தையைத் தூக்கி எறிந்துவிட்டு இதற்குப் பதிலளியுங்கள். நேர்மையாக இருந்து, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments