Ticker

6/recent/ticker-posts

TikTok ரீல்ஸ் காட்டி போலீஸை கேலி செய்த இளைஞர்கள் சிக்கினர்! சம்மாந்துறையில் அதிரடி நடவடிக்கை! 🚔🏍️

 


TikTok ரீல்ஸ் காட்டி போலீஸை கேலி செய்த இளைஞர்கள் சிக்கினர்! சம்மாந்துறையில் அதிரடி நடவடிக்கை! 🚔🏍️


சமூக வலைத்தளங்களில் வைரலாக வேண்டும் என்ற ஆசையில் போக்குவரத்து காவல்துறையினரை கேலி செய்து TikTok வீடியோக்களை வெளியிட்ட இரண்டு இளைஞர்கள், சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த ஜூன் 5 முதல் 8 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தலைக்கவசம் அணியாமை, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் செலுத்துதல் மற்றும் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை இயக்குதல் போன்ற சட்ட மீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, பொலிஸாரின் கடமைகளை கேலி செய்யும் வகையில் சில இளைஞர்கள் வீடியோக்களை பதிவு செய்து TikTok உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீடியோக்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சம்மாந்துறை பொலிஸார், வீடியோவில் இடம்பெற்ற நபர்களை அடையாளம் கண்டு இருவரை கைது செய்துள்ளனர்.

மேலும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது தலைக்கவசம் அணியாதது, உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் செலுத்தியது மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 10 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு நீதிமன்றம் 38,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும், ஏனையோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் புகழ் பெறும் நோக்கில் சட்டத்தை மீறும் செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும், போக்குவரத்து விதிமுறைகளை மதித்து நடந்து கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments