மட்டக்களப்பு நகரில் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்துக் காடுகளுக்குள் வீசிவிட்டு, அவரின் தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி (Mobile Phone) ஆகியவற்றைக் கொள்ளையடித்துத் தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவத்தில் ரிதிதென்னை காட்டுப் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த சாரதி, வியாழக்கிழமை (28) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பூநொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவரே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு நகரின் 'சின்ன ஆஸ்பத்திரி' ஆட்டோ தரிப்பிடத்தில் இருந்து நீண்டகாலமாக வாடகைச் சேவையில் ஈடுபட்டு வருபவராவார்.
சம்பவ தினமான புதன்கிழமை (27) பிற்பகல் 3.00 மணியளவில் வீடு சென்று மதிய உணவை உட்கொண்ட சாரதி, மீண்டும் ஆட்டோ தரிப்பிடத்திற்குச் சென்றுள்ளார். பின்னர், இரவு உணவிற்காக இடியாப்பம் வாங்கிக்கொண்டு இரவு 7.00 மணியளவில் வீடு திரும்புவதாகத் தனது உறவினர்களுக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆட்டோ தரிப்பிடத்திற்கு வந்த நபரொருவர், வாழைச்சேனை வரை செல்வதற்காக இவரது ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். எனினும், இரவு 11.00 மணியாகியும் சாரதி வீடு திரும்பாததினால் பதற்றமடைந்த உறவினர்கள், அவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை (28) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை காட்டுப் பகுதியை அண்டிய பகுதியில், ஆட்டோ ஒன்றிற்குள் சாரதி ஒருவர் மயங்கிக் கிடப்பதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
இது குறித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மயக்கமுற்றுக் கிடந்த சாரதியை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஆட்டோவை வாழைச்சேனைக்கு வாடகைக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், திட்டமிட்டபடி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து அவரை நிலைகுலையச் செய்துள்ளனர். பின்னர், அவரிடமிருந்த ஒரு பவுன் தங்க மோதிரம், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, அவரைப் பாழடைந்த காட்டுப் பகுதியில் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக்கோடூரக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும், வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து விசேட விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

0 Comments