நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை இன்று (29) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொது மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக உருவெடுத்து திருகோணமலைக்கு வடகிழக்கே 310 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துரைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
அது புயலாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை (30ம் திகதி) தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் இன்றைய தினத்தின் பின்னர் படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வட மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ. க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments