சாய்ந்தமருது சந்தைத் தொகுதியில் வாடகை வாகனங்களை வழங்குகின்ற நிறுவனம் எனும் பெயரில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த உரிமையாளரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் அமைந்துள்ள சந்தை தொகுதியின் மேல் மாடியில் அண்மையில் திறக்கப்பட்ட வாடகை வாகனங்களை வழங்குகின்ற நிறுவனம் நடாத்துகின்ற 43 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) இரவு 15 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து மறுநாள் திங்கட்கிழமை (01) சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய குறித்த வழக்கு நேற்று (01) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகநபரை ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சாய்ந்தமருது - 10 பகுதியை சேர்ந்த 43 வயதுடைய முகமட் அஸீஸ் முபீத் என்பவராவார்.

குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் நுகர்தல் மற்றும் விற்பனையில் பல நாட்களாக ஈடுபட்டவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

-அம்பாறை நிருபர் ஷிஹான்-