(வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கான வேலைத்திட்ட வெளியீடு, தேசிய மக்கள் சக்தி - ஸ்ரீ ஜயவர்தனபுர Monarch Imperial ஹோட்டல் வளாகத்தில் – 01.09.2024 தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை)

சற்று நேரத்திற்கு முன்னர் எங்களுடைய வேலைத்திட்டத்தின் சாரம்சம் இங்கு முன்வைக்கப்பட்டது. முன்வைத்த அத்தனை விடயங்களையும் நாங்கள் ஈடேற்றுவோம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். சற்று பழைய அறிக்கையொன்றின் ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னர் அந்த வருடத்தில் வெளிநாட்டு தொழில்களுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து மூவாயிரம் என்பதாகும். அதில் ஏறக்குறைய ஆறாயிரம் போ் தொழில்துறை வல்லுனர்களாவர். ஆகவே எஞ்சிய இரண்டு இலட்சத்து தொண்ணூற்றி ஏழாயிரம் போ் பயிற்றப்பட்ட அல்லது பயிற்றப்படாத அல்லது பகுதியளவில் பயிற்றப்பட்டவர்களாகவே வெளிநாட்டு தொழில்களுக்கு சென்றிருக்கிறார்கள். ஆகவே வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடனே மிக அதிகமானோர் வெளிநாட்டுத் தொழில்களுக்கு செல்கிறார்கள். ஒரு சிலர் இருக்கின்றார்கள் தமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக, சிறந்த தொழிலை மேற்கொள்வதற்காக, தமது பிள்ளைகளின் சிறப்பான கல்விக்காக வெளிநாடு செல்கிறார்கள்.

எனவே பெரும்பங்கினர் நாட்டுக்குள்ளே தொழில்வாய்ப்பு கிடைக்காமையால் வருமானத்தை பெற்றுக்கொண்டு பாதுகாப்பான வாழ்க்கையை அனுபவிக்கவே வெளிநாடு செல்கிறார்கள். தொழில்களுக்காக வெளிநாடு செல்பவர்களின் மூன்று பிரதான நோக்கங்கள் இருக்கின்றன. முதலாவது வீடொன்றை அமைத்துக்கொள்வது இரண்டாவது வாகனமொன்றை கொள்வனவு செய்வது மூன்றாவது பிள்ளைகளுக்கு கல்விபுகட்டுவது. குறிப்பாக மத்தியக்கிழக்கு நாடுகளில் குவைத், கட்டார், அபுடாபி போன்ற நாடுகளைப் பார்த்தால் வீட்டுப்பணிப்பெண்களாக அல்லது உழைப்பாளிகளாக போகின்றவர்களின் பிரதான நோக்கங்கள் அவ்வாறானதாக அமைந்துள்ளன. இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன. ஆனால் பெரும்பாலானவர்களின் வீடொன்றை அமைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பு ஈடேறவில்லை. தொலைத்தூர கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் அரைகுறையாக அமைத்த வீடுகள், பகுதியளவில் கூரை வேயப்பட்ட வீடுகள், பகுதியளவில் சுவர் எழுப்பப்பட்ட வீடுகள் இருக்கின்றன. அவர்கள் தமது உறவினர்கள் குடும்பத்தவர்களை பிரிந்து நீண்டகாலமாக வெளிநாடுகளில் பணியாற்றச் செல்வதையும் அவ்வாறு செல்லும்போது விமான நிலையத்தில் பிரிவுத்துயரால் அழுது புலம்புவதையும் நாங்கள் காண்கிறோம். ஆனாலும் திரும்பி வந்து வீட்டை அமைத்துக் கொள்வதில் வெற்றி பெறவில்லை. எனவே எங்களுடைய வேலைத்திட்டத்தில் அந்த பிரார்த்தனையை ஈடேற்றிக்கொள்வதற்கான சலுகைக் கடன் திட்டமொன்றையும் அதனை மேற்பார்வை செய்வதற்கான வேலைத் திட்டத்தையும் நாங்கள் அமுலாக்குவோம்.

இரண்டாவது விடயமான பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுதல் என்பதை எடுத்துக் கொண்டால் எங்களுடைய ஊர்களில் கணிசமான பிள்ளைகள் கல்வியில் சீரழிந்து போயுள்ளார்கள். தாய்மார்கள் வெளிநாடு செல்லும்போது பெரும்பாலும் பாட்டியிடமே பிள்ளையை ஒப்படைத்துவிட்டு போகிறார்கள். பாட்டி வேறொரு தலைமுறையை சோ்ந்தவர். புதிய தலைமுறையின் கருத்துக்கள், நடத்தைப்போக்குகள் புரிந்துணர்வு இவர்களுக்கு கிடையாது. தகப்பன் நாசமாகி வேறொரு பக்கம் போய்விடுகிறார். எனவே பிள்ளையின் கல்வியும் வெற்றியடையவில்லை. எனவே எங்களுடைய கல்வித்திட்டத்திலே வெளிநாடு சென்றுள்ளவர்களின் பிள்ளைகளின் கல்வி எதிர்பார்ப்பினை எவ்வாறு ஈடேற்றுவது என்பதை நாங்கள் உள்ளடக்கியிருக்கிறோம். பாடசாலை செல்லாத பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் அமுலாக்குவோம். எனவே அந்த பிள்ளைகளுக்கு வழிகாட்டி அந்த பிள்ளைகளை பிள்ளைகளாக கவனித்துக் கொள்ளக்கூடிய சமூகமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.

மூன்றாவது வாகனமொன்றை கொள்வனவு செய்வதாகும். இப்பொழுது கூட அவர்கள் அனுப்பிவைக்கின்ற பணத்தைக் கொண்டு மின்சாரத்தில் இயங்குகின்ற வாகனமொன்றை வாங்கலாம். அது மிகவும் குறைந்த சதவீத அளவினர் ஆவர். அவர்களுக்கு எப்படி அது வழங்கப்படுகிறது என்று எங்களுக்கு தெரியும். தேசிய மக்கள் சக்தி மேற்கொள்கின்ற அடிப்படையான பூர்வாங்க ஆய்வுகளின் ஒன்று தான் இவர்களுக்கு எவ்வாறு வாகன உரிமங்கள் வழங்கப்பட்டன என்பது. எங்களிடம் சான்றிதழ் இருகின்றன. அதனை நாங்கள் ஒழுங்குமுறைப்படுத்தி வழங்கப்படவேண்டியவர்களுக்கு உரிமங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை வகுப்போம்.

அடுத்த விடயம் ஒரு சில ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் வெளிநாடுகளில் வேலை செய்து விட்டு இலங்கைக்கு திரும்பி வருகிறார்கள். அவ்வாறு வந்து குறுகிய காலத்தில் கொண்டு வந்த எல்லா பணத்தையும் செலவழித்து தீர்க்கிறார்கள். மீண்டும் வெளிநாடு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். காரணமென்ன? கையில் பணம் இருந்தாலும் அதனை எவ்வாறு பயனுள்ள வகையில் முதலீடு செய்யவேண்டுமென்ற வழிகாட்டல் அவர்களுக்கு கிடையாது. எந்தக் கருத்திட்டத்தில் ஈடுபடுத்தவேண்டும் என்ற அறிவு கிடையாது. எனக்கு தெரியும் கொரியாவுக்குச் சென்ற பலர் கணிசமான பணத்தை கொண்டு வருகிறார்கள். ஒன்றில் நெல் அறுவடை இயந்திரமொன்றை, மண் போக்குவரத்து செய்வதற்காக டிரக் வண்டியொன்றை, வாடகை சவாரிக்காக வேன் ஒன்றை வாங்குகிறார்கள். இல்லையென்றால் ஹார்ட்வெயர் ஒன்றை திறக்கிறார்கள். சில காலத்தில் இருந்த நிலையைப் பார்க்கிலும் கீழே விழுந்து மீண்டும் போக முயற்சி செய்கிறார்கள். மீண்டும் மொழி பயிற்சி வகுப்புகளுக்கு செல்கிறார்கள். மீண்டும் பரீட்சை எழுத முயற்சிக்கிறார்கள். இது தான் நிலைமை.

எங்கள் நாட்டிலே விளைச்சல் குறைந்த சிறிய தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன. அவற்றை இந்த இளைஞர்களுக்கு பெற்றுக்கொடுத்தால் பயிர் செய்வதற்கான நிலம் இருக்கிறது பணம் இருக்கிறது. எனவே அதனை விருத்தி செய்து தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். எனவே காசு தேடி மீண்டும் நாட்டை விட்டு வெளியே செல்லாமல் கொண்டு வந்த பணத்தை இந்த நாட்டிலே முதலீடு செய்து தனது வாழ்க்கையை வளர்த்துக்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த முதலீடுகள் பற்றிய முறைசார்ந்த திட்டமொன்றை தயாரிக்கும். அதிலிருந்து நிலையான வருமானமொன்றை பெற்றுக்கொள்ளலாம்.

அடுத்ததாக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களிலிருந்து தமக்கு கிடைக்கின்ற சேவை பற்றி பெரும்பாலானோர் திருப்தியடைவதில்லை. ஒரு சில பிரதேசங்களில் தொழில் செய்வோரின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் நிலவுகின்றன. வீட்டிலிருந்து வெளியிலிருந்து போக்கிடமில்லாமல் பஸ் தரிப்பு நிலையங்களிலும் பாலத்தடியிலும் பூங்காக்களிலும் பொழுதை கழிக்கிறார்கள். எமது நாட்டில் எந்தவொரு பிரஜைக்கும் இந்த கதி நேரக்கூடாது. வருமானம் ஈட்டுவதற்காக வெளிநாடு சென்றபோதிலும் அங்கே பல்வேறு துயரங்களை எதிர்நோக்கி வருகிறார்கள். நாங்கள் நாகரிகம் அடைந்த தேசத்தவரா? எனவே அந்த அனைவரையும் பாதுகாப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பாகுமென நாங்கள் உத்தரவாதமளிக்கிறோம். சற்று சிந்தித்துப் பாருங்கள். வேறொரு தேசத்தவருக்கு ஏதாவது சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அவர்கள் அதற்காக எவ்வளவு குரல் கொடுக்கிறார்கள். அது தனியொரு பிரஜையின் பாதுகாப்பிற்காகும். ஆனால் பல்லாயிரக்கணக்கான எமது பிரஜைகள் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை நாங்கள் ஈடேற்றுவோம். மற்றுமொரு பிரச்சினையும் இருக்கிறது. பிள்ளையையும் அழைத்துக்கொண்டு வெளிநாடு செல்கிறார்கள். பிள்ளையை அங்கே பாடசாலைக்கு அனுப்புகிறார்கள். மீண்டும் இலங்கைக்கு வரவேண்டிய தேவை ஏற்படுகிறது. பிள்ளையை அழைத்து வந்தால் கல்வி தடைப்படும். எனவே பெற்றோரில் ஒருவர் அங்கே தங்கவேண்டி நேரிடும். இப்பொழுது பிள்ளையின் கல்வியிலேயே குடும்பத்தின் எதிர்கால திட்டம் தங்கியிருக்கிறது. ஒரு சில பாடத்துறைகளை எங்களால் அறிமுகம் செய்ய முடியும். அந்த பிள்ளை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொண்ட பாடத்திட்டத்தை பயிலுமானால் இலங்கைக்கு வந்து மீண்டும் அதே கல்வித்துறையிலே கல்வியை தொடர்வதற்கான பாதுகாப்பையும் உரிமையையும் நாங்கள் வழங்குவோம்.

எங்களுக்கு தெரியும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் விசா காலத்தை நீடித்துக் கொள்ள, பாஸ்போர்ட் காலாவதியாகியிருந்தால் அதனை நீடித்துக்கொள்ள கடிதங்கள் அங்குமிங்கும் பறிமாற்றிக்கொள்ளப்பட நீண்டகாலம் எடுக்கும். நாப்போலியில் இருப்பவர் உரோமுக்கு வரவேண்டும். அதனால் அலைந்து திரியவேண்டிய நிலை ஏற்படும். அதைவிட கள்ளத்தனமாக இருப்பது நல்லதுபோல் தெரிகின்றது. தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. சற்று சிந்தித்துப் பாருங்கள். டுபாயிலிருந்து திட்டமிட்டு இங்கே படுகொலை செய்ய முடியும். சிறையிலிருந்து தூள் வியாபாரம் செய்ய முடியும். அந்தளவிற்கு பாதாள உலகமும் குற்றச் செயல் புரிபவர்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே அதனை அரசாங்கத்தின் பொறுப்பாக ஏற்றுக்கொண்டு பிறப்புச் சான்றிதழ், விவாக சான்றிதழ், விசா நீடிப்பு, பாஸ்போர்ட் நீடிப்பு, வதிவுச்சான்றிதழ், பொலிஸ் அறிக்கை இவையெல்லாமே பாரிய சிக்கலாக காணப்படுகின்றன. ஆகவே தேசிய மக்கள் சக்தி இவை அனைத்தையும் ஒழுங்குமுறைப்படுத்தும். வினைத்திறனுடன் சேவையை வழங்குவதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும். எனவே அன்றாட வாழ்க்கையில் வெளிநாடு சென்றுள்ளவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும். அந்த விடயங்களை அதன் கொள்கை வெளியீட்டில் உள்ளடக்கியிருக்கிறது.

வெளிநாடு சென்றுள்ளவர்களின் ஒரே வருமான வழிவகை அவர்கள் அங்கே ஈட்டுகின்ற பணமாகும். இங்கே திரும்பி வந்த பின்னர் அவர்களுக்கு எந்த விதமான வாழ்வாதாரமும் கிடையாது. எனவே இவர்களுக்கு ஒரு பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அவர் அங்கு தொழில் புரிகின்ற காலத்தில் அதற்கு பங்களிப்பு செய்கின்ற அளவில் அதற்கேற்ற ஓய்வூதியத்தை மாதாந்தம் பெற்றுக்கொள்ளலாம். அதனை எம்மால் சாதிக்க முடியுமென நாங்கள் நம்புகிறோம். அடுத்ததாக பரவலாக பேசப்படுகின்ற விடயம் வெளிநாடு சென்றுள்ளவர்களின் உரிமைகள் பற்றியதாகும். அவர்கள் வெளிநாடு செல்வது தமது அரசியல் உரிமையை கைவிடுவதாக அமையுமா? இப்பொழுது வெளிநாடு சென்றுள்ளவர்களின் அரசியல் உரிமையை ஏளனம் செய்கிறார்கள். அவர்கள் இங்கே வந்து வாக்களிக்க முடியாது. அப்படியில்லாவிட்டால் அவர்கள் அங்கேயே இருக்கவேண்டும். ராஜித ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் அனைவருமே இங்கே வாழ விரும்பியவர்கள். ராஜித போன்றவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்து தான் அவர்களை வெளிநாடு செல்லும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளார்கள். இப்பொழுது அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். இங்கு வாக்களிக்க வந்தால் இங்கேயே தங்கிவிட வேண்டுமென்று. பெரும்பாலானவர்கள் இந்த நாட்டில் வாழ விரும்புகிறார்கள். விஜயமுனி த சொய்சாவும் அவ்வாறு பரிகாசம் செய்தார்கள். அவர்கள் உலகில் எங்கே இருந்தாலும் அவர்களின் அரசியல் உரிமைக்கு மதிப்பளித்து அதனை பாதுகாக்கின்ற இயக்கமே தேசிய மக்கள் சக்தியாகும். தான் வசிக்கின்ற இடத்திற்கு இணங்க அரசியல் உரிமையை கைவிடவேண்டியதில்லை. அவர்கள் இருக்கின்ற நாட்டிலே இருந்து கொண்டே வாக்களிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி கருதுகிறது. எனவே அது பற்றிய எங்கள் முன்மொழிவுகளை நாங்கள் தயாரித்துள்ளோம்.

வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களான நீங்கள் ஈட்டித்தந்த பணத்தினால் தான் இலங்கை இந்தளவிற்காவது தாக்குப்பிடித்து இருக்கிறது. இலங்கையில் ஒரு தனியான அலகு என்ற வகையில் மிக அதிகமான டொலர்களை ஈட்டித்தருபவர்கள் வெளிநாடுகளில் தொழில் செய்பவர்களே. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய முன்னர் 6.8 பில்லியன் டொலர் கிடைத்தது. தேயிலையிலிருந்து ஏறக்குறைய 1.2 பில்லியன் டொலர்களே கிடைக்கின்றன. சுற்றுலா தொழிற்துறையில் உச்சளவில் 4.2 பில்லியன் டொலர்களே கிடைத்துள்ளன. ஆடைத் தொழிற்துறையிலிருந்து 5 பில்லியன் டொலர்களே கிடைத்துள்ளது. ஆனால் ஆடைத் தொழிற்துறைக்கு நாங்கள் மூலப்பொருட்களுக்கு கணிசமான தொகையை செலவிட வேண்டும். சுற்றுலாத் துறைக்காக வழங்குகின்ற சேவைகளுக்காக பணத்தை செலவிடவேண்டும். ஆனால் 6.8 பில்லியன் டொலர் தேறிய வருமானம் வெளிநாட்டு உழைப்பாளிகளிடமிருந்து கிடைத்துள்ளது. எனவே இன்றும் இந்த நாடு இயங்கிக் கொண்டிருப்பது வெளிநாடு சென்றுள்ளவர்கள் அனுப்பி வைக்கின்ற பணத்தைக் கொண்டுதான் என்பதை குறிப்பிடவேண்டும். அந்த டொலர்களில் உயிர்வாழ்ந்து, நாட்டில் எதிர்நோக்கிய தீர்மானகரமான பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வுகண்டு அவர்களுக்கே அச்சுறுத்தல் விடுப்பதானால் இவர்கள் மனிதர்களா? உங்களின் சேவைக்கு நன்றி. மதிப்பளிக்கிறோம். நீங்கள் அனுப்பிவைக்கின்ற டொலரின் பலத்தினால் தான் இந்த நாடு நிலைத்திருக்கிறது.

இன்றைக்கு ஏழு எட்டு மாதங்களுக்கு முன்னர் SIS அரசாங்கத்திற்கு ஒர் அறிக்கையை கொடுத்தது. அந்த அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அது ஓர் அரசியல் அறிக்கையாகும். அந்த அறிக்கையிலே தேசிய மக்கள் சக்தி இதோ இந்த துறைகளில் வளர்ந்து வருகிறது. அதனால் அவர்களின் வெற்றியை தடுக்க முடியாது எனக்குறிப்பிடப்பட்டது. அவர்கள் இரண்டு விடயங்களை குறிப்பிட்டுள்ளார்கள். இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு எந்தளவிற்கு தொடர்பு கொள்கிறார்களோ எந்தளவிற்கு ஆர்வத்துடன் செயலாற்றுகிறார்களோ என்பதை அளவிடுவதை ஒரு காரணியாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இதன் வளர்ச்சி தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முன்னெடுத்துச் சென்று வருகிறது என குறிப்பிட்டிருந்தார்கள். அடுத்ததாக வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் தேசிய மக்கள் சக்தி மீது காட்டுகின்ற நாட்டம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே தேசிய உளவுச் சேவை வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களின் இந்த எழுச்சி காரணமாக தேசிய மக்களின் சக்தியின் பயணத்தை திசை திருப்ப முடியாது என குறிப்பிட்டுள்ளார்கள். எனவே எங்களுடைய வெற்றி தொடர்பில் பாரிய பூரிப்பினை உருவாக்குகையில் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் பாரிய பங்கினை வகிக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். பொது மக்களுக்கு மாத்திரமல்ல எங்களுக்கும் அவர்கள் ஒரு தூண்டுதலை அளித்திருக்கிறார்கள். அதை நான் இதயசுற்றியுடன் கூறுகிறேன். ஐக்கிய அமெரிக்காவில், கனடாவில், ஐக்கிய இராச்சியத்தில், பிரான்சில், ஜேர்மனியில், இத்தாலியில், கிறீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், மத்தியக்கிழக்கில் கொரியாவில் பணியாற்றி நாட்டை விட்டு தொலைவில் இருந்தாலும் நாட்டை நேசிக்கின்றவர்கள் என்ற வகையில் இந்த நாட்டை மாற்றியமைக்க முயற்சி செய்து வருகின்ற இலட்சக்கணக்கான இலங்கையர்கள் இருக்கிறார்கள் என்பதை காணும்போது அது எமக்கு தெம்பூட்டுகிறது. எமது நம்பிக்கையை வளர்க்கிறது. எனவே தேசிய மக்கள் சக்தியின் அரசியல் எழிச்சிக்கு வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் ஊக்கியாக செயற்பட்டுள்ளார்கள். நீங்கள் தான் எமக்கு நம்பிக்கையை ஊட்டியவர்கள். செயற்பாட்டில் மாத்திரமல்ல. பங்குபற்றலில் மாத்திரமல்ல. சமூக வலைத்தளங்களில் அவர்கள் எமக்காக பங்களிப்புச் செய்து வருகிறார்கள். எங்களுடைய ஊடகத்துறை மிகவும் சிறியது. ஏறக்குறைய இருபது போ் தான் இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் இதை பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய அரசியல் உரையாடல்களில் கண்விழித்து பார்த்து அதைப்பகிர்ந்து அவற்றை தமது அரசியல் ஆய்வுக்காக பயன்படுத்தி அவற்றை மீண்டும் சமூகத்திற்கு கொண்டு வர அவர்கள் பாரிய பிரயத்தனம் செய்கிறார்கள். ஒரு சிலர் கட்டிடங்களை வாடகைக்கு விட்டு கணனிகளையும் தொலைபேசிகளையும் பாவித்து தேசிய மக்கள் சக்தியின் அரசியலை சமூக வலைத்தளங்கள் உயர்த்தி வைத்துள்ளன. அதில் பெரும்பங்கினை ஆற்றி வருகின்ற வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். எனவே தேசிய மக்கள் சக்தி அடைகின்ற வெற்றியின் முதன்மைப் பணி வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களால் ஈடேற்றப்பட்டு வருகின்றது. அது தொடர்பில் நாங்கள் அவர்களுக்கு மதிப்பளிக்கிறோம். நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதியாக கூற வேண்டிய விடயம் எமக்கிடையில் உடன்பாடு ஒன்று நிலவுகிறது. நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த அரசியல் செயற்பாங்கில் பங்களிப்பு செய்கிறீர்கள். எனவே எங்களுடைய பொறுப்பு என்ன? நீங்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிதைக்காமல் பாதுகாப்பதாகும். எமக்கு அறிமுகமாகாதவர்கள், நாம் கண்டிராதவர்கள், சில வேளைகளில் மீண்டும் இலங்கைக்கு திரும்பி எதிர்பார்த்திராதவர்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். அது தான் எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் நிலவுகின்ற உடன்பாடு. அந்த நம்பிக்கையை பாதுகாக்க வேண்டியது எங்களுடைய கடமையாகும். எனவே நாங்கள் ஒற்றுமையாக பயணிப்போம். இந்த பயணத்தை வெற்றியில் நிறைவு செய்வோம். ஒன்று செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை அயராது உழைப்போம். அதன் பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒன்று பட்டு செயற்படுவோம் என அழைப்புவிடுத்து விடைபெறுகிறேன்.