பொதுச் சேவைகளின் சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்புகள் தற்போது நடைபெற்று வரும் தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கையை பாதிக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க, அரச நிதி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளதாக தெரிவித்தார்.
சம்பள அதிகரிப்பு தொடர்பான தற்போதைய முன்மொழிவுகள் 2025 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
சம்பளத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அதன் பின்னரே பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சமீபத்திய முன்னேற்றங்கள் வாக்காளர்களை பாதிக்குமா என்ற கேள்விகளுக்கு பதிலளித்த ரத்நாயக்க, தேர்தல் நடைமுறைகள் குறித்து அரசு ஊழியர்கள் நன்கு அறிந்திருப்பதாக கூறினார்.
ரத்நாயக்க, அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார், அவர்களின் நடவடிக்கைகள் வாக்காளர்களை எந்த வகையிலும் திசைதிருப்பவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது என்பதை வலியுறுத்தினார். “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை உறுதி செய்வது அனைத்து கட்சிகளின் பொறுப்பாகும்,” என்று அவர் கூறினார்.
ஜனவரி 1, 2025 முதல் பொதுச் சேவைகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினரால் கவலைகள் எழுப்பப்பட்டதை அடுத்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அரச சேவைகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி நிபுணர் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே இந்த பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என பல்வேறு தரப்பினரும் வாதிடுகின்றனர்
0 Comments