இந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், கேஸ் சிலிண்டரை சுற்றி இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இன்னும் பல கட்சிகள் இதில் இணைய உள்ளதாக ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்தார்.

அரச ஊழியருக்கான தபால் மூல வாக்கெடுப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன,

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு சுமார் 20 நாட்கள் கடந்துள்ளன.
இக்காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் எமது வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் அதை நன்றாகத் கண்டுகொண்டுள்ளோம். தேர்தல் நடவடிக்கைகளுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன.

நேற்று அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஆரம்பித்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே பெரும்பான்மையான அரச ஊழியர்கள் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கைப் பொலிஸார் பெரும்பான்மையானோர் தமக்கே வாக்களித்ததாக சில வேட்பாளர்கள் தெரிவித்த போதிலும், அந்தக் கூற்றுக்கள் பொய்யானது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக கேஸ் சிலிண்டரைச் சுற்றியே இதுவரை இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பலர் இக்கூட்டணியில் இணைய உள்ளனர்.

ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் என்ற வகையில் எமது கட்சியின் கருத்தையும் இந்த நேரத்தில் குறிப்பிட வேண்டும். சகல துறைகளிலும் வீழ்ச்சியடைந்த இந்த நாட்டில் இரண்டு வருடங்களில் மீண்டு வந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க கட்சி என்ற வகையில் தீர்மானித்தோம். அதைச் செய்யக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.

எதிர்க்கட்சிகள் என்ன கூறினாலும் ஜனாதிபதி தெளிவான வெற்றியைப் பெறக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்டத்தில் உள்ள சாதாரணமானவர்கள் அந்த முடிவை அமைதியாக எடுத்துள்ளனர். நாட்டை வீழ்ச்சியடைந்த மோசமான பள்ளத்தில் இருந்து தூக்கி நிறுத்த அவர் செயல்படுத்திய திட்டம் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

புதிய ஜனசெத முன்னணியின் தலைவர் காமினி விஜேநாயக்க,

இந்த நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்தபோது, மக்களின் துயரங்களை உணர்ந்த தலைவர் ஒருவர் இருக்கவில்லை. அப்போது, நாட்டை மீட்கும் பொறுப்பை மக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார். அந்தப் பொறுப்பை அவர் சரியாக நிறைவேற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தோம். தற்போது சஜித் பிரேமதாசவின் நடத்தை அவர் தனது தந்தைக்கு எதிராகவும் செயற்படுவதையே காட்டுகிறது. அன்று ஆர். பிரேமதாச அவர்களின் கட்சியின் தலைவர் ஜே. ஆர். ஜயவர்தன ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். அப்போது ரணசிங்க பிரேமதாசவுக்கும் பிரச்சினைகள் இல்லாமலில்லை, ஆனால் அவர் தலைவரையும் கட்சியையும் பாதுகாக்க பாடுபட்டார்.

ஆனால் இன்று சஜித் பிரேமதாசவிடம் இருந்து அவ்வாறான நடத்தையை நாம் காணவில்லை. அதிகார பேராசை கொண்ட அவர், விரைவில் ஜனாதிபதியாக வர முயற்சிக்கிறார். அதன்மூலம் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நாடு வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது. அன்று கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்றார். அந்த ஆணையுடன் நாடு வீழ்ந்த அதே இடத்திற்கு மீண்டும் கொண்டு வருவதற்கு சஜித் முற்படுகிறார். அந்த துரதிஷ்டமான இடத்திற்கு இந்த நாட்டை இழுத்துச் செல்ல வேண்டாம் என்று சஜித் பிரேமதாசவிடம் கேட்டுக்கொள்கிறேன்.

துன்புறும் மக்களை மீண்டும் கஷ்டத்தில் தள்ள வேண்டாம் என்று சஜித்திடம் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அனுரகுமார திஸாநாயக்கவின் ஜே.வி.பி. செய்த அழிவை நாம் அறிவோம். சஜித் மற்றும் அனுர இருவரும் இணைந்து இந்த நாட்டை அதலபாதாளத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். சஜித் பிரேமதாசவினால் ஒருபோதும் அனுரகுமாரை தோற்கடிக்க முடியாது. இருவரும் அந்த இருவருக்கும் மறைமுகமாக உதவி செய்கிறார்கள். நாம் அதை பார்க்கிறோம்.

தற்போதைய ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தை அனுரவினாலும் அல்லது சஜித்தினாலும் முன்னெடுக்க முடியாது. மேலும் அவரை தோற்கடிக்கவும் இயலாது. இப்போது கிராமிய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் உள்ள மக்கள் அதனைப் புரிந்து கொண்டுள்ளனர். அமைதியாக இருக்கும் மக்கள் தங்கள் வாக்குகளை கேஸ் சிலிண்டர் சின்னத்தின் முன் பதிவு செய்வர். அதை யாராலும் தடுக்க முடியாது. இன்று கூச்சல் போடுபவர்கள் அன்று பின்வாங்குவாறார்கள்.

சஜித் எமது வாக்குத் தளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினால், நாட்டிற்கு ஏற்படும் தலைவிதிக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அன்று சஜித் துன்புறும் மக்களால் சபிக்கப்படுவார். அரசியலில் அவர் முன்னேற வாய்ப்பே இல்லை. இது இன்று மக்களின் கருத்தாக மாறிவிட்டது. கோட்டாபயவின் ஆட்சிக்கு நாடு திரும்பினால் அதனை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். சஜித்தும் அரசியலுக்கு “குட் பை” சொல்ல வேண்டி வரும். மேலும், எதிர்காலம் குறித்து சிந்தித்து எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்து இந்த நாட்டை ஐந்து வருட காலத்திற்கு அவரிடம் ஒப்படைக்க கேஸ் சிலிண்டர் முன் உங்கள் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.“ என்றார்.