அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை இறக்குமதிப் பொருளாதாரமா அல்லது ஏற்றுமதிப் பொருளாதாரமா என தாம் கேள்வி எழுப்பி, 03 நாட்களாகியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவன் திருடன், இவன் திருடன் என்று கூறாமல் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி முன்வைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் விவசாய அமைச்சர் அனுரகுமார, கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதியை விட மோசமாக நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராகி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் வலியுறுத்தினார்.
பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நேற்று(13) நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு சலுகைகள் வழங்குவதற்கான ஆலோசனைகளும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
புள்ளி விவரங்களுடன் விடயங்களை முன்வைப்பது போல் திசைகாட்டி தனது வரவு செலவுத் திட்டம் பற்றிய உண்மைகளை புள்ளி விவரங்களுடன் மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
எனவே, மக்களை ஏமாறாமல் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் உண்மையான புரிதலுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி
‘‘மக்கள் கஷ்டத்தை போக்குவதே எனது நோக்கமாக இருந்தது. அதனை வெற்றிகரமாக செய்திருக்கிறேன். இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைந்திருக்கிறது. மக்கள் கஷடத்திலிருப்பதும், பிள்ளைகள் பாடசாலைகள் செல்லாமலிருப்பதும் எனக்கு கவலையளித்தது.
ஆனால் இன்று நாட்டின் பொருளாதாரம் நிலைத்தன்மைக்கு வந்திருக்கிறது. இந்த பயணத்தை இன்னும் ஆறு வருடங்களாவது தொடர வேண்டும். வாழ்க்கைச் சுமையை குறைப்பதே எனது பிரதான இலக்கு.
தொடர்ந்தும் கடன் பெற்று வாழாமல் சொந்த வருமானத்தில் வாழ்வதற்கான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம். அரச ஊழியர்களுக்கும், தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கினோம்.
வௌிநாட்டு கையிருப்பு அதிகரித்திருப்பதால் வாகன இறக்குமதி தடையை நீக்க முடிவு செய்திருக்கிறோம். வரி செலுத்தும் வரம்பை அதிகரித்து மக்களுக்கு சலுகை வழங்க வழி செய்திருக்கிறோம். அடுத்த வருடத்தில் இவற்றை முடக்க முடியாது. நாட்டின் முன்னேற்றத்தை அதிகரிப்பதே எனது நோக்கம்.
சுற்றுலாத்துறைப் பலப்படுத்தினால் இந்த பிரதேசம் இலகுவாக அபிவிருத்தியை நோக்கி செல்லும். புதிதாக ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும். அரசாங்கத்திலும் தனியார் துறையிலும் நிதி உதவியுடன் தொழில் பயிற்சிகள் வழங்குவோம்.
இதுவே எமது ஆரம்பம். இதனைக் கைவிடக்கூடாது. முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்கவின் விஞ்ஞாபனத்தை அடிப்படையாக வைத்து வரவு செலவு திட்டமொன்றைத் தயாரித்தோம். அவர் கோட்டாபயவையும் மிஞ்சிவிடுவார் என்பது தெரிகிறது. அவர்களின் கொள்கைப்படி ரூபாவின் பெறுமதி விண்ணைத் தொடும். அவற்றை செயற்படுத்தினால் 2022 இல் இருந்ததை விடவும் நெருக்கடிகள் உருவாகும்.
அது குறித்து கேள்வி கேட்டால் அநுரவை அவதூறு செய்வதாக கூறுகின்றனர். அனுரவால் இவற்றை செய்ய முடியுமானால் நான் எதிர்க்கப்போவதில்லை. அவர் சரியான தரவுகளுடன் அது குறித்து விளக்கமளிக்க வேண்டும். சில இளைஞர்கள் திசைக்காட்டிக்கு வாக்களிக்க தீர்மானித்திருந்தாலும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடன் இருக்கின்றனர்.
எனவே, திசைக்காட்டிக்கு வாய்ப்பளித்து எதிர்காலத்தை சூனியமாக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இப்போது அநுர என்னை விவாதத்திற்கு அழைக்கிறார். ஆனால் நான் கேட்ட ஒரு கேள்விக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. இவ்வாறானவர்களிடம் எவ்வாறு எதிர்காலத்தை கையளிப்பது.
மறுமுனையில் சஜித் எல்லாவற்றையும் இலவசமாக தருவதாக சொல்கிறார். அவ்வாறு இலவசமாக வழங்க வேண்டுமாயின் அமெரிக்காவிற்கு நிகரான பொருளாதாரம் இலங்கைக்கு இருக்க வேண்டும். எனவே செப்டம்பர் 21 உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது. டொலரும் இருக்காது. “ என்றார்.
Share
0 Comments