கலபொட அத்தே ஞானசார தேரரால் பலவந்தமாக கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கொழும்பு பம்பலப்பிட்டியவில் அமைந்துள்ள 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டையும் சொத்துக்களையும் உடனடியாக விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை உடனடியாக விடுவிக்குமாறு ஞானசார தேரர் மற்றும் பிரதிவாதிகள் இருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள இந்த வீடு தனது 82 வயதான உறவினரான சுமித்ரா சேனாநாயக்கவினால் தமக்கு வழங்கப்பட்டதாக ஏக்கல பிரதேசத்தைச் சேர்ந்த இனோகா சந்திமா சேனாநாயக்க என்பவர் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக ராஜகிரிய சிறி சதர்ம ராஜித விகாரையைச் சேர்ந்த கலபொட அத்தே ஞானசார தேரர், ஞானசார தேரரின் உதவியாளர் என்று நம்பப்படும் தயாசீஹ தேரர் மற்றும் சில்வெஸ்டர் என்ற ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.