பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலபத்த அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்ததாக கூறி அவருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை நவம்பர் 14ஆம் திகதி வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.

முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படாத நிலையில், குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்யுமாறு சிரேஷ்ட சட்டத்தரணி காமினி அல்விஸ் நீதிமன்றில் கோரினார்.




2016 ஜூலை 8, அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ​​இஸ்லாம் தொடர்பான அறிக்கை மத நல்லிணக்கத்தை மீறுவதாகவும், அதன்படி, குற்றவியல் சட்டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.




வழக்கு விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர் இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதவான், நவம்பர் 14ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்.