எனது வெற்றி என்பது எனது கட்சியின் வெற்றி. கட்சின் வெற்றி என்பது நாட்டின் வெற்றி என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இன்று ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. என் மீதி நம்பிக்கை வைத்து, இந்த சவாலான நேரத்தில் எனக்கு இந்த பொறுப்பினை ஒப்படைத்ததில் கட்சியின் அரசியல் குழுவுக்கும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் சவாலை ஏற்க தயார் என தெளிவாகக் கூறுகிறோம். தலைமை மற்றும் சவால் என்று வரும் போது இளைஞர்கள் தேவைப்படுகின்றனர். கட்சி சார்பிலும் எங்கள் கட்சியின் கொள்கை சார்பிலும் நாம் இந்நாடு எதிர்பார்க்கும் இளைஞர்களுடன் கை கோர்த்துப் போகும் ஒரு சக்திமிக்க கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லும்.

விசேடமாக தாய்மார்களினதும் இளைஞர்களினதும் எதிர்பார்ப்புக்கள் பூக்கும் கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இருக்கும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் என்ற முறையிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற முறையிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கச் சென்ற எம்மவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைந்து கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாம் ஒன்றாக இருந்தவர்கள். மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்கலாம். எம்மில் யாருக்கும் குறை நிறைகள் இருக்கலாம். அவற்றை சரி செய்து முன்னோக்கிச் செல்வோம். அனைவரையும் மீண்டும் ஒருமுறை கட்சியுடன் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி நிச்சயம். எனது வெற்றி என்பது எனது கட்சியின் வெற்றி. கட்சின் வெற்றி என்பது நாட்டின் வெற்றி. தேர்தல் என்பது சவாலானது. அதற்காகத்தான் நாம் சவாலை எதிர்க்க வந்துள்ளோம். யாரையும் விமர்சிக்க நான் வரவில்லை. அது எனது கொள்கையும் இல்லை.

மொட்டின் இதழ்களை பிரிக்க முயற்சிக்க முடியும். ஆனால் மொட்டு மலர்வதும் சேற்றில் தான். காம்பும் மொட்டும் இரு வேறு தரப்பிடம் இருந்தாலும் இறுதித் தீர்மானம் மக்கள் கையில் தான் உள்ளது…”