உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாவை அவர் 16.08.2024 அன்று செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாதுகாப்புப் படைத் தலைவரும் ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உச்ச நீதிமன்றம் 2023 ஜனவரி 12 ஆம் திகதி தீர்ப்பளித்ததை அடுத்து இந்த இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸுக்கு 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த தீர்மானத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடு தொகை 7 வழக்குகளில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கும் உரிய நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
0 Comments