முதலில் மக்கள் அரகலயவை ஏன் செய்தார்கள்? கோட்டா, மஹிந்தவை துரத்துவதற்காக மட்டுமா அல்லது துரத்தி ஒரு நல்லாட்சிக்கு நாட்டின் எதிர்காலத்தை வித்திடவா என்ற கேள்வியை முதலில் எழுப்பினால் கோட்டா, மஹிந்தவைத் துரத்தும் நோக்கம் நிறைவேறியது எனலாம் ஆனால் நல்லாட்சிக்கு வித்திட மேலே கூறப்பட்டுள்ள குறைபாடுகள் அவதானிக்கப் பட்ட மூவரையே தேர்தலில் பிரதான கட்சிகளாக காட்சியளிக்கும் போது இரண்டு கேள்விகள் எழுகிறது.
1. அரகலயவை நடாத்திய பிரதான நபர்கள் இந்த மூன்று கட்சிகளையும் சேர்ந்தவர்களேயன்றி நல்லாட்சி விரும்பிகளான பொதுமக்கள் அல்ல என்பது தெளிவாகிறது. ஏனெனில் இந்த 3 நபர்களிலும் மக்கள் விரும்பும் திறமை வாய்ந்த அனுபவம், செயல்திறன் மிக்க இனவாதமற்ற மத கலாசார நம்பிக்கைகளை மதித்து அவரவர் சுதந்திர வாழ்க்கையை மக்கள் அனுபவிக்க அனுமதிக்கக் கூடியவராக, ஊழலை ஒழிக்கக் கூடியவர் யாரென்பது சம்பந்தமாக பாரிய கேள்விகள் எழக்கூடியவர்களையே இன்று பிரதான போட்டியாளர்களாக காட்சியளிக்கிறார் கள். எனவே இவர்களைக் கொண்டு வருவதுவா அரகவயவின் நோக்கம்?
2. நாட்டின் ஊழல், இனவாதத்தை ஒழித்து புதிய அரசியல் கலாசாரம், அரசியல் கொள்கைகள், System change ஐக் கொண்டு புதிய தலைமுறையினூடாக நாட்டில் சுபீட்சமான சூழலை உருவாக்குவதுவா நோக்கம்?
இரண்டாவது கேள்விக்கு விடை இல்லை. எனவே நாட்டின் பெரும்பாலான பொதுமக்களுக்கு அரகலயவினால் ஏற்பட்ட புத்துணர்வு, புதிய நம்பிக்கை தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது என்றுதான் கூற முடியும்.
கேள்வி ஒன்றில் உள்ள 3 ஜனாதிபதி வேட்பாளர்ளின் ஒப்பீட்டுக்கு வருவோம்.
*ஜனாதிபதி ரணில் அவர்கள்*
இவர் அரசியல் அனுபவம் அதி கூடியவர். இனவாதமற்றவர் என்று பரவலாக அறியப்பட்டவர். எனினும் தன் அரசியல் காய்நகர்த்தலுக்காக எல்லாவறாறையும் பார்த்துக் கொண்டு தனக்கு எதுவும் தெரியாதவராக நல்லாட்சியில் இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இவர் நிச்சயமாக ஒரு திறமைசாலி, சர்வதேச தொடர்புகள் நிறையவே உள்ளவர். 2002 ம் ஆண்டில் சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ந்த போது அரசைப் பாரமெடுத்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாட்டின் பொருளாதார சுமையை ஓரளவு நிமிர்த்தி நாட்டை பொருளாதார பாதாளத்தில் விழாமல் தடுத்தார் என்ற உண்மையையும் மறக்க முடியாது.
ஆனால் ஊழலற்ற தலைவர் என்று நிச்சயமாக கூறமுடியாது. மத்திய வங்கி கொள்ளை இவரின் ஊழலுக்கு இன்றும் எதிரொலி எழுப்பிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் அளவுக்கு இவரின் ஊழல் நிச்சயமாக அமையவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இவர் மீது தற்போது உள்ள பிரதான குற்றச் சாட்டு என்னவென்றால் நாட்டை கொள்ளையடித்து குட்டிச் சுவராக்கிய ராஜபக்சகளை ரணில் பாதுகாக்கிறார் என்பதுதான்.
உண்மையில் ரணில் ராஜபக்சகளை பாதுகாக்கிறாரா அல்லது பயன்படுத்துகிறாரா என்ற கேள்விக்கு பதில் காண வேண்டும்.
ரணில் தற்போது தொங்கி நிற்பது கோட்டா வின் அரசில். ராஜபக்சகளுக்கெதிராக நடவடிக்கை எடுத்தால் அந்த கோட்டா அரசாங்கம் ரணிலுக்கு ஆதரவு வழங்காது. அவ்வாறு வழங்காத நிலையில் ரணிலுக்கு 2 வாரங்களுக்கு மேல் ஜனாதிபதியாக நீடிக்க முடியாது ஆதாரம் யாப்பின் Article 44(3). சஜித் அணியும் ரணிலுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று கைவிரித்த உண்மையையும் இங்கு நினைவு கூரவேண்டும்.
எனவே ரணில் ஜனாதிபதியாக இருக்க வேண்டுமேயானால் ராஜபக்சகளை பகைத்துக் கொள்ள முடியாது என்ற நிர்ப்பந்த சூழலும் அவரின் பக்கத்தை நியாயப்படுத்தாமலில்லை.
இந்த நாட்டில் ஊழல் எல்லா துறைகளிலும் ஊடுருவிய நிலையில் அதனை யாராலும் உடனடியாக கட்டுப்படுத்த முடியாது என்ற யதார்த்தத்திற்கு அப்பால் யார் எந்த புண்ணாக்கு வாக்குறுதியை வழங்கினாலும் அது வெறும் ஏமாற்றும் தந்திரமாகவே பார்க்க முடியும்.
எனவே ரணில் இவற்றின் அடிப்படையில் ஒரு நடைமுறைச் சாத்தியப்பாட்டுடன் பயணிக்கின்ற ஒரு தலைவராக பார்க்கலாம். மேலும் இவர் ராஜபக்சகளை அவருக்கு எம்பிக்கள் இல்லாததால் பயன்படுத்துகிறார் என்றே கருதவேண்டியுள்ளது.
*சஜித் அவர்கள்*
இவருடைய திறமையை பார்ப்பதற்கு இவருக்கு பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ இருக்க இதுவரை வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை ஆனால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவர் எதிர் கட்சியாக இருக்கும் போதே பல மக்கள் திட்டத்தை உருவாக்கி அந்த மக்களை சந்தோஷப் படுத்திய ஒரேயொரு தலைவர் எனலாம். அதாவது நாட்டிற்காக, மக்களுக்காக தான் எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம், முயற்சி உள்ளவர் என்பதை நிரூபித்த ஒரு தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஊழலில் ஈடுபட்டதற்கான குறிப்பிடத்தக்க எந்த தகவலையும் நான் அறியவில்லை. ஆனால் இனவாதம் இல்லாதவர் என்று கூற முடியாது. முஸ்லிம் இளைஞர்கள் சிலர் மலையில் ஏறி இவரால் சிக்கலுக்குள்ளானது இவரின் இனவாத போக்கிற்கு ஒரு ஆதாரமாக இன்றும் பேசப் படுகிறது.
மேலும் இவர் அனுபவம் குறைந்தவர், திறமையை நிரூபிக்காதவர், சர்வதேச நட்புகள் குறைந்தவர் என்று கூறப்பட்டாலும் இவரோடு சேர்ந்து இருக்கும் ஏனைய அரசியல் தலைவர்களை பார்த்து ஒப்பிடும் போது இவரது அணி ஏனைய இரண்டு அணிகளை விடவும் சிறந்த அணியாக பரவலாக கருதப்படுகிறது. எனவே இவரின் ஆட்சி மலர்ந்தால் ஓரளவு நல்ல மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே கூறப்பட்டுள்ள ரணில் சஜித் அணிகளை ஒப்பிடும்போது ரணில் தனது தனித்திறமையில் தங்கியுள்ளார் என்பது மட்டுமல்ல வேறு திறமைசாலிகள் இருந்தாலும் அவரே பந்தையும் வீசி அவரே Batting ஐயும் செய்து வெற்றி பெற முயற்சிப்பார். அவரது கருத்துக்கு முரணாக எவரையும் தன் சொந்த Idea ல் பந்து வீசவோ Batting செய்யவோ அனுமதிக்க மாட்டார். ஆனால் தோல்வியும் இவரை இலகுவில் நெருங்கவும் முடியாது. தனியாக சாதிக்க முடியும் என்று நம்பி சாதித்தும் நிரூபித்தவர் தான் இந்த ரணில். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. மற்றவர்களுக்கு வாய்ப்பை வழங்க விரும்பாத குறைபாடான தலைவராக இருந்தாலும் இந்த வயதிலும் சாதனை வீரன் என்று நிரூபிக்க தவறவுமில்லை.
*அனுர (AKD) அவர்கள்*
கடுமையான கொள்கைவாதி. பேச்சுத்திறன் மிக்கவர். ஊழல் மிகக் குறைந்த அல்லது அற்றவர். இதற்கு நிச்சயமாக சகல மனசாட்சி உள்ளவர்களும் ஆதரவு வழங்கியே ஆகவேண்டும். ஆனால் இந்த மனோநிலை நாட்டில் ஊழலை அவர் கூறுவது போன்று இல்லாதொழிக்க முடியும் என்று நம்புவது நிச்சயமாக நமது மடமைக்கு சான்று பகரும். இந்த உண்மையை உற்று நோக்கினால் அனுர கூச்சமின்றி பொய் உரைக்கிறார் என்பது தெளிவாகிறது.
இவருடைய திறமை அறியப் படாதவை. சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலே நிரூபிக்க முடியும். அனுபவமற்றவர். சர்வதேச உறவுகள் மற்ற இருவரையும் விட குறைவாக உள்ளவர். தன்னுடன் இருக்கும் ஏனையோர் பெரும் பகுதி அறியப்படாதவர்கள், அரசியலில் அனுபவமற்றவர்கள், இத்தகைய புதிய அரசியல்வாதிகளுக்கு நல்லாட்சி எண்ணம் அதிகமாக இருந்தாலும் வினைத்திறனும் அனுபவமும் அற்றவர்கள் புரட்சிகரமான நல்லெண்ண நடவடிக்கைகளுக்குள் நுழைந்து நாட்டை குழப்பிவிடலாமென்ற அச்சமும் எழாமலில்லை.
மேலும் இவர்களது மாக்ஸிஸம், கொமியூனிசம், நாஸ்திகம் போன்ற கொள்கைகள் மதரீதியான கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் சமூகத்திற்கு பெரும் சவாலாக அமையலாம். குறிப்பாக முஸ்லிம்களின் சமய கலாசார உரிமைகள் நசுக்கப்படலாம். இதன் மூலம் AKD முஸ்லிம் தீவிரவாதத்தை தூண்டி முஸ்லிம்களை நசுக்கும் மறைமுக எண்ணத்தைக் கொண்டுள்ளாரா என்ற சந்தேகத்தையும் அவரது 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற பேச்சு நிராகரிப்பதாக இல்லை.
மேலும் இவர் கட்சியில் தற்போது 3 பாராளுமன்ற ஆசனங்களே உள்ளது. அதனால் யாப்பின் பிரகாரம் ஊழல்வாதிகளுடன் இணையாமல் அவர்களின் நிபந்தனைகளுக்கு உடன்படாமல் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியாது. அதற்கு 43(4), 44(3) ஆகிய யாப்பின் உறுப்புரைகள் சான்றுகளாக உள்ளன. மேலும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பாராக இருந்தால் எந்த கள்வர்களுடனும் சேரமாட்டோமென்று AKD கூறுவது பொய்யைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க வாய்ப்பில்லை.
இந்த கூட்டு இடைக்கால ஆட்சி மலர்ந்தால் அரசாங்கம் ஒரு கட்சியும் ஜனாதிபதி இன்னொரு கட்சியும் என்ற சமநிலை வரும் போது AKD ஆல் 70 - 80 பாராளுமன்ற ஆசனங்களுக்கு மேல் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலிலும் பெற முடியாது போகும். இந்நிலை தேர்தலின் பின்னரும் கள்வர்களுடன் கூட்டணி சேராமல் அரசை அமைக்க முடியாத சூழ்நிலையே AKD ற்கு உருவாகும். எனவே ஊழலை இல்லாதொழிக்க, நாடு நிமிர வாய்ப்பு குறைவு. வாக்காளர்களுக்கு ஏமாற்றம் தொடரும்.
மேலும் தற்போது உள்ள வாக்களிப்பின் உத்தேச விகிதாசாரப்படி எந்த வேட்பாளருக்கும் ஆட்சி தனியாக அமைக்க போதுமான பாராளுமன்ற ஆசனங்கள் கிடைக்கப் போவதில்லை. எனவே கூட்டணி அரசு தவிர்க்க முடியாதது என்பதுதான் யதார்த்தம்.
இருப்பினும், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஏனைய கட்சிகள் அனுரவிற்கு ஆதரவளிக்க மறுத்தால் நாட்டில் அத்தகைய சூழலில் என்ன நிகழலாம் என்பதைப் பற்றி யாப்பில் எதுவும் கூறப்படவில்லை. So, it's anybody's guessing including military governance.
ஆயினும் சஜித்துடன் 60 ற்கு மேற்பட்ட எம்பிக்கள் இருப்பதாக கூறப்படுகிறது அவர் கள்வர்களை சேர்க்க மாட்டோம் என்று கூறவில்லை எனவே மேலும் 15 எம்பிக்களைப் பெற்றால் 2015 ல் மைத்திரி சிறுபான்மை அரசை அமைத்து ஆட்சி செய்தது போல சஜித்துக்கும் ஆட்சி அமைப்பதில் சிக்கல்கள் ஏற்படாது. ரணில் அவர்களுக்கு அந்த பிரச்சினையே வராது.
எனவே மக்கள் சிந்தித்து தங்கள் தெரிவுகளை மேற்கொள்வது சிறந்தது.
ஏதாவது முக்கிய விடயங்கள் விடுபட்டு இருந்தால் அடுத்த பதிவுகளில் தருவேன், இன்ஷா அல்லாஹ் …!
இந்த ஆக்கம் உரியவருக்கு உரித்தானது
0 Comments