Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிராக இம்முறை ஏராளமான மக்கள் போராட்டம் - சுமார் ஒன்றரை லட்சம் களத்தில்


ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாக காஸாவுக்குப் பிடித்துச் செல்லப்பட்டுள்ள இஸ்ரேல் குடிமக்களை மீட்கக்கோரி இஸ்ரேலில் நேற்று சனிக்கிழமை(ஜூன் 22) போராட்டம் வெடித்தது.

இஸ்ரேலை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காஸாவில் பிணைக் கைதிகளாக இருப்பதாக கூறப்படும் நிலையில், டெல் அவிவ் நகர வீதிகளில் திரண்ட ஏராளமான மக்கள், அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போர் நிறுத்தம் ஏற்பட்டால் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ள மக்களை திருப்பி அனுப்புவதாக ஹமாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், காஸாவில் இஸ்ரேல் அரசு இராணுவம் மூலம் ஹமாஸ் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கைகளில் இஸ்ரேல் கொடிகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்ட லட்சக்கணக்கானோர் நெதன்யாகுவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதையும், அரசை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தக்கோரியும் முழக்கங்களை எழுப்பியதையும் காண முடிந்தது.


சுமார் ஒன்றரை லட்சம் பேர் சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது. போராட்டக்காரர்கள் சிலர் சாலைகளை ஆக்கிரமித்து, டயர்களைக் கொளுத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. லட்சக்கணக்கானோர் திரண்டதால் காவல்துறையினர் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த திணறியதையும் காண முடிந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காஸா மீதான போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இத்தனை லட்சம் மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது. காஸாவுக்கு பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டோரின் குடும்பத்தினரும் உறவினர்களும் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனர்.

டெல் அவிவ் நகரில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் பங்கேற்ற பலர் சாலைகளில் புரண்டு அரசுக்கு எதிராக எதிர்ப்பைப் பதிவு செய்ததையும் காண முடிந்தது. நெதன்யாகு தலைமையில் இஸ்ரேலில் ஜனநாயகம் செத்து மடிந்துவிட்டதாகப் போராட்டக்காரர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments