Ticker

6/recent/ticker-posts

ஓமான் மனிதக் கடத்தல் விவகாரங்கள் : இதுவரை கைதான 7 பேருக்கும் பிணை ; வெளிநாடு செல்ல தடை


 (எம்.எப்.எம்.பஸீர்)

வேலை வாங்கி தருவதாக கூறி, இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் வரவழைத்து ஓமானில் விபசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும்  ஆள் கடத்தல் சம்பவத்தை மையப்படுத்தி சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் 3 ஆம் செயலர் ஈ.குஷான் உள்ளிட்ட 7 பேரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம்  இன்று (13) உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று (13) கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே விளக்கமறியலில் இருந்து மன்றில் ஆஜர் செய்யப்பட்ட  குறித்த 7 பேரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தரகர்களில் ஒருவராக செயற்பட்டதாக கூறப்படும்  அவிசாவளை - புவக்பிட்டியவைச் சேர்ந்த  பாலகிருஷ்ணன் குகனேஷ்வரன், வத்தளை மற்றும் தெஹிவளை  பகுதிகளை சேர்ந்த  44 வயதான மருதானையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிலையம் நடாத்தும் மொஹம்மட் றிஸ்மி மொஹம்மட் இன்சாப், ஆட்கடத்தலுடன் நேரடி தொடர்புபட்டதாக கூறப்பட்ட தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த ஆஷா திஸாநாயக்க, ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3 ஆம் செயலர்  எதிரிசாரிகே குஷான் இடைத் தரகர்களான அஜித் குமார சமரகோன்,  யோகா எனும் யோகேந்திரன், உப முகவரான தெளபீக் மொஹம்மட் நெளபர் ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து சந்தேக நபர்களினதும் வெளிநாட்டு பயணங்களை தடை செய்த நீதிவான்,  ஒவ்வொரு மாதமும் இறுதி  ஞாயிறன்று முற்பகல் 9.00 மணிக்கும் நண்பகல் 12.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்தேக நபர்கள் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

இன்றையதினம் மன்றில் விடயங்களை முன் வைத்த  மனிதக் கடத்தல், கடத்தல்கள் குறித்த விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்,  இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  இலங்கையில் இருக்கும் 24 தரகர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களில் மூவர்  ஏற்கனவே கைது செய்யப்பட்ட 7 பேரில் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க விசாரணையாளர்கள் குழுவொன்று ஓமான் தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மன்றில் குறிப்பிட்டனர்.

இதுவரையான விசாரணைகளில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 45 பெண்களின் வாக்கு மூலங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தூதரகத்தினால் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டடமொன்றின் வீட்டிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  'சுரக்ஷா' எனும் அந்த பாதுகாப்பு இல்லத்தில் சுமார்  90 பெண்கள் வரை தங்கவைக்கப்பட்டிருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையாளர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த நீதிவான் நத்தன மரசிங்க, சந்தேக நபர்களுக்கு பிணையளித்த பின்னர் வழக்கை எதிர்வரும் 2023 ஜனவரி 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். 

Post a Comment

0 Comments