Ticker

6/recent/ticker-posts

ருஹுணு தேசிய கல்வி கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் - வெளியானது காரணம்!


எம்.எப்.எம்.பஸீர்)

காலி - அக்மீமன ருஹுணு தேசிய கல்வி கல்லூரியில் சனிக்கிழமை (நவ.26) இரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 14 பேர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய கல்விக் கல்லூரியில் தங்கியிருந்து கல்வி கற்கும் 2 ஆம் வருட மாணவர்கள் குழுவொன்றே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

குறித்த கல்விக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் எனக் கூறப்படுபவர்கள், இதற்கு முன்னர் தங்கியிருந்து கல்வி பயின்ற, பயிற்சி ஆசிரியர்களாக பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள குழுவினர் திடீரென விடுதிக்கு புகுந்து தாக்குதல் நடாத்தியதாக காயமடைந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணையில், 40 பேர் கொண்ட பயிற்சி குழுவினர், நேற்று அப்பகுதியில் தமக்குள் ஒன்று கூடலை நடாத்தியுள்ளதாகவும், பின்னர் அங்கிருந்து குடிபோதையில் சென்று தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சுமார் 50 பேர் கொண்ட குழுவொன்று கல்விக் கல்லூரியின் வேலியை மீறி உள்ளே நுழைந்ததாக ருஹுண கல்விக் கல்லூரியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கல்விக் கல்லூரியில் நுழைந்தவர்கள், கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்விக் கல்லூரி மூடப்பட்டிருந்த காலப்ப்குதியில், தம்மால் பகிடிவதை நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் போனதாகவும் அதற்காக 2 ஆம் வருட மாணவர்களை பகிடிவதை செய்ய முறப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதிக்குள் அத்து மீறி நுழைந்துள்ள குழுவினர், கைத்தொலைபேசிகளை பெற்றுக்கொண்டு பகிடிவதையை ஆரம்பித்ததாக அங்குள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையே முருகல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் உத்தரவில், காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.என்.ஜே. வெதசிங்கவின் மேற்பார்வையில் காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஆர்.எச்.எஸ். மாசிங்கவின் ஆலோசனையில் அக்மீமன பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments