எரிபொருட்களின் தரம் குறித்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய எரிபொருள் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.


கொழும்பில், இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தரப் பரிசோதனைக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பெற்றோல் மற்றும் டீசல் தரம் குறைவாக இருப்பதாக, நுகர்வோரிடமிருந்து 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கடந்த மாதத்தில் மட்டும் தமக்கு கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நாட்டில் 1,200 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளதாகவும் 100 இடங்களில் இருந்து 100 முறைப்பாடுகள் கிடைத்திருந்தால், நாட்டின் 10 சதவீத நிரப்பு நிலையங்களில் தரம் குறைந்த எரிபொருள் உள்ளதென கருதமுடியும் என்று குறிப்பிட்டார்.

எரிபொருளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் ஒரு லீற்றர் எரிபொருளுக்கான பயணத்தூரம் குறைவடைந்துள்ளதாகவும் நுகர்வோர் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், எரிபொருள் அனுமதிச்சீட்டுக்கு அமைய எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதில்லை என்றும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே முறைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகார குழுவினால் விசாரணைகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.