Ticker

6/recent/ticker-posts

அன்று தமிழர்களையும், JVP சிங்களவர்களையும் கொலைசெய்து நாட்டையும்,…


அன்று தமிழர்களையும், JVP சிங்களவர்களையும் கொலைசெய்து நாட்டையும், அதிகாரத்தையும் பாதுகாத்தவர்களால் ஏன் இன்று முடியவில்லை ? 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது அன்றைய பாதுகாப்புச் செயலாளரான கோட்டபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களின் எண்ணிக்கை ஏராளம். இதனால் “கோட்டா யுத்தக் குற்றம் செய்தவர்” என்ற குற்றச்சாட்டுகளும், கண்டனங்களும் சர்வதேசரீதியில் பலமாக உள்ளது.

அவ்வாறான தீவிர போக்குள்ள கோட்டா அவர்கள், தனது ஜனாதிபதி பதவிக்கும், உயிருக்கும் ஆபத்து நேர்ந்த தருணத்திலும் தன்னையும், தனது பதவியையும் பாதுகாக்கும் பொருட்டு தமிழர்களை கொன்றது போன்று தென்னிலங்கை போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கு படையினர்களுக்கு உத்தரவிடவில்லை.

முப்படைத் தளபதி என்றரீதியில் அவ்வாறு படையினர்களுக்கு உத்தரவிட்டிருந்தால், 1971, 1988, 1989 ஆகிய ஆண்டுகளில் JVP யினர்களின் கிளர்ச்சியை அடக்கியது போன்று அடக்கியிருக்கலாம்.

அன்று JVP என்ற அடையாளம் இருந்ததன் காரணமாக கொல்லப்பட்ட பொது மக்கள் அனைவரும் JVP கிளர்ச்சியாளர்கள் என்ற பட்டியலுக்குள் அடங்கப்பட்டனர். மாறாக சிங்கள பொதுமக்களை கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. 

ஆனால் இன்றைய போராட்டக்காரர்கள் கட்சி அல்லது அமைப்பு என்ற அடையாளமின்றி “அரகல” என்ற போர்வையில் போராடுகின்றனர். பொருட்களின் தட்டுப்பாடுகளும், விலை ஏற்றமும் இவர்களது போராட்டத்துக்கு ஒன்றிணைந்த அனைத்து சமூகங்களினதும் ஆதரவினை வழங்கியுள்ளது.        

அத்துடன் அன்று JVP யை அடக்கிய ஆட்சியாளர்கள் எதிர்கால வாரிசு அல்லது குடும்ப அரசியல் பற்றி சிந்திக்கவில்லை. மாறாக கட்சி அரசியலையே மேற்கொண்டனர்.  

இலங்கையில் உள்ள சிறுபான்மை சமூகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நோக்குகின்ற ராஜபக்ச குடும்பத்தினர், தமிழ் தலைவர்களை மீறி தமிழ் மக்கள் தங்களுக்கு தேர்தல்களில் வாக்குகளை வழங்கப்போவதில்லை என்று உறுதியாக நம்பியதனால் புலிகள் என்ற போர்வையில் பொது மக்களையும் கொன்று குவித்தனர்.

புலிகளுடனான யுத்தம் முடிவுற்றதன் பின்பு முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறிக்கின்ற நடவடிக்கைகளில் தென்னிலங்கை சிங்கள இனவாத சக்திகளை தூண்டிவிட்டதன் காரணமாக தங்களது குடும்ப அரசியலுக்கு முழுமையாக சிங்கள மக்களை மாத்திரம் நம்பியிருக்க வேண்டிய நிலை ராஜபக்ச குடும்பத்துக்கு ஏற்பட்டது.       

இதன்காரணமாக நிராயுதபாணிகளான இன்றைய “அரகல” என்கின்ற போராட்டக்காரர்கள் மீது பலமான துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருந்தால், ராஜபக்ச குடும்பத்துக்கு அது காலம் முழுக்க சிங்கள மக்கள் மத்தியில் கறுப்புப் புள்ளியாக அமைந்துவிடும். அதாவது குடும்ப அரசியல் ஒன்று இல்லாதிருந்திருந்தால் தற்போது போராட்டக்களம் கொலைக்களமாக மாறியிருக்கும். 

ஆனாலும் இன்றைய போராட்டக்காரர்கள் ஆயுதம் ஏந்தியிருந்தால், அவர்கள் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் மனித வேட்டை நிகழ்ந்து பலர் கொலை செய்யப்பட்டு இன்றைய போராட்டம் முடிவுற்றிருக்கும்.     

எனவேதான் குடும்ப மற்றும் வாரிசு அரசியலின் எதிர்கால நன்மை கருதி ஜனாதிபதி கோட்டா அவர்கள் மட்டுமல்ல முழு ராஜபக்ச குடும்பத்தினரும் நிதானத்தை கடைப்பிடித்து வருகின்றனர். தற்போது கோட்டா செய்யவேண்டிய வேலைகளை ரணில் விக்ரமசிங்க மூலமாக செய்கின்றபோது அது ரணிலோடு முடிந்துவிடும். மாறாக ராஜபக்ச குடும்பத்துக்கு எந்தவித வடுக்களையும் ஏற்படுத்தாது. 

ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு குடும்ப அல்லது வாரிசு அரசியல் ஒன்றில்லை. அதனால் பாதுகாப்பு படையினர்களுக்கு அதி உச்ச உத்தரவுகளை வழங்கி போராட்டத்தினை கட்டுப்படுத்த முடியும் என்பது ராஜபக்சாக்களின் விருப்பமாக இருக்கலாம். 

எனவேதான் ராஜபக்சாக்களின் எண்ணங்களை ரணில் செயல்படுத்தப் போகின்றாரா என்பது எதிர்வரும் நாட்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை வைத்து எங்களால் உறுதிப்படுத்த முடியும். 

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது

Post a Comment

0 Comments