காணாமல்போயுள்ள கிரிப்டோ ராணி என்று அறியப்படும் ருஜா இக்னடோவா என்ற பெண் அமெரிக்கா புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐயினால் தேடப்பட்டு வரும் முக்கிய 10 பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தனது 40 வயதுகளில் இருக்கும் பல்கேரியாவைச் சேர்ந்த அவர் ‘வைன்கொயின்’ என்று அழைக்கப்படும் கிரிப்டோ நாணய மோசடியில் ஈடுபட்டவர் என தேடப்பட்டு வருகிறார். இவர் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 4 பில்லியன் டொலருக்கு மேல் மோசடி செய்து தலைமறைவாகி இருப்பதாக எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

அமெரிக்கா பிடியாணை பிறப்பித்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் அவர் காணாமல்போயுள்ளார்.

கிரிப்டோ கரன்சி என்று அழைத்துக் கொண்ட வன்கொயின், 2014இல் அதிக நபர்களுக்கு நாணயத்தை விற்றால் வாங்குபவர்களுக்கு தரகுப் பணம் வழங்க ஆரம்பித்தது. எனினும் இந்த முறை பாதுகாப்பு அற்றது என்று எப்.பி.ஐ குறிப்பிட்டது.

இந்நிலையில் இக்னடோவாவை கைது செய்வதற்கு துப்பு வழங்குபவருக்கு 100,000 டொலர் சன்மானம் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்.பி.ஐயினால் தேடப்படும் முதல் பத்துப் பேரில் இருக்கும் முதல் பெண் இவராவார்.

2017இல் பல்கேரியாவில் இருந்து கிரேக்கத்துக்கு செல்லும் விமானம் ஒன்றிலேயே அவர் கடைசியாக காணப்பட்டுள்ளார். அது தொடக்கம் அவர் தொடர்ந்து காணாமல்போனவராக உள்ளார்.